திருமலைப் படுகொலைகள் யூன்,ஒகஸ்ட்,செப்டம்பர் – 1985


இம்மாதங்களில் திருமலை மாவட்டத்தில் பல படுகொலைகள் நடந்தேறின. பிரசைகள் குழுக்களின் இணைப்பு அமைப்பின் அறிக்கைகளின் படி முன்னூற்று பதினொரு தமிழர்கள் யூன் 1985இல் திருமலையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சற்றடே ரீவ்யூ நாளேடு 21.12.1985 அன்று வெளியிட்ட செய்தியில் இத்தொகை முன்னூற்று எண்பத்துமூன்று எனக் கூறியது. ஜெரமி கிளிங் என்கிற செய்தியாளர் சாம்பல் தீவில் பலர் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென டெல்லி நியூசில் தகவல் வெளியிட்டிருந்தார். 1985ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நான்காம் திகதிக்கும் ஒன்பதாம்; திகதிக்குமிடையில் திட்டமிடப்பட்ட முறையில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை நகரின் வடபகுதியிலிருந்து தமிழர்களைத் துரத்தும் நடவடிக்கையாக இவ்விராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆகாய வழியாக உலங்குவானூர்தியும் கடலிலிருந்து எறிகணைத் தாக்குதலும், துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டன. சென்ரல் வீதி, பிரதான வீதி, ஏகாம்பரம் வீதி, வீரநகர், திருக்கடலூர், உப்புவெளி, மூன்றாம் கட்டை, நாவலர் றோட், உப்புவெளிச் சந்தி ஆகிய இடங்களில் கனரக ஆயுதங்கள் தரித்த இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் ஊர்காவற் படையினரும் இங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இவ்விரு குழுக்களும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது தமிழர்களுக்குச் சொந்தமான ஆயிரத்து ஐநூறு வீடுகளும் கடைகளும் கட்டடங்களும் அழிக்கப்பட்டதுடன் தமிழர்களுக்குச் சொந்தமான வள்ளங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது இருநூறு சிறுவர்கள் தங்கியிருந்து சிவானந்த தபோவனத்தின் கட்டடமும் தகர்த்து அழிக்கப்பட்டது. இந்துக் கோயில்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இருபத்தைந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அழிப்பதற்கு தமிழர்களுக்கு எந்தச் சொத்தும் இல்லை என்றவுடன், இத்தாக்குதல் நிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் நடவடிக்கை வெளியிற் தெரியாமல் இருக்க நாளேட்டு நிருபர்களோ, வெளிநாட்டு நிருபர்களோ இப்பகுதிக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டனர்.