தமிழீழ காவல்துறை


  படியுங்கள்

தமிழீழ காவல்துறை மக்களின் சொத்து

தமிழீழ காவல்துறை அமைப்பு விதிகள் 1991

 

1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது.

தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களோடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்மந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவல்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்” என்றார்.

குறிப்பு:- சிங்கள காவால்துறையினரால் யாழ். பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களின் தொண்டர்களாய்… பாதுகாவலர்களாய்…

அருகிய வளங்களும், பெருகிய தேவைகளும் கொண்ட சமூகச் சூழலில் முரண்பாடுகளும், மோதல்களும், கசப்பும், காழ்ப்புணர்ச்சியுமே மனிதர்களின் இயல்பாகிப்போகிறது. இதனால்தான் சமூக வாழ்வில் சில வரையறைகளும், நியதிகளும் தவிர்க்க முடியாத தேவிகள் ஆகின்றன. இந்த வரையறைகளை வடிவமைத்து மக்களின் மத்தியில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதே ஒரு அரசாங்கத்திற்கான காவற்துறையின் பணியாகும். அதிலும் போராடும் ஒரு தேசத்தின் நடைமுறை யதார்த்தம் மிகவும் சிக்கலானது. மகளது இயல்பு வாழ்வே குழம்பிப்போயிருக்கும்போது சட்டங்கள் நலிவடைந்து போக குற்றங்கள்

எனினும் எமது தமிழீழத்தைப் பொருத்தவரை தேச விடுதலையுடனான சமூக விடுதலையையும் முன்னெடுக்கும் கொள்கைக்கு அமைவாக மக்களின் இயல்பான நிம்மதியான வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு பலமிக்க கட்டமைப்பாகவே தமிழீழக் காவற்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் திகதி தமிழீழ காவல்துறைக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 1991ம் ஆண்டு, கார்த்திகை 19ம் திகதி அன்று தமிழீழ காவல்துறையின் அணிவகுப்ப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஒரு தனியரசை நிறுவப் போரிடும் ஒரு தேசிய இனமாகிய எமது விடுதலைப்போர் வரலாற்றில் பொறித்து வைக்கபட வேண்டிய நிகழ்வாக காவல்துறையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இன்று தமிழீழத்தில் படிப்படியாக பரவலாக பணிமனைகளைத் திறந்து தமது சேவையை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதில் தமிழீழ காவல்துறையின் பெண்கள் அணியின் வளர்சியும் அபாரமானது. அயல்நாடுகளான சிறிலங்காவிலோ, இந்தியாவிலோ நடைமுறையில் காணப்படாத பல சமூக சீர்திருத்தத்திற்கான சட்ட ஒழுங்குகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வளர்ச்சிப் பெருக்கானது தமிழீழப் பெண்களை முன்னேற்றகரமான, துணிவுள்ள பெண்களாக வாழ வகைசெய்ய முனைவதில் வெற்றிகண்டு வருகின்றது.

தமிழீழ காவற்துறையின் பெண் உப பரிசோதகர் செல்வி. பொன்னையா பவானி அவர்களுடன் சில நிமிடங்கள்.

■ 1991ம் ஆண்டு, உங்களது முதல் அணியின் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வெளியேறிய அன்றிலிருந்து இன்றுவரை காவற்துறை நிர்வாகத்தில் பெண்கள் அணியினரான உங்களது பங்கு பற்றி கூறுவீர்களா…?

1991ம் ஆண்டு, கார்த்திகை மாதம் , 19ம் திகதி எமது அணிகள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறின. எமது முதலாவது அணிவகுப்பை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டு, எமது பணிகளை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டில் யாழ்ப்பாணம், சுண்ணாகம், சங்கானை, கோப்பாய், சாவகச்சேரி, பளை, பருத்தித்துறை, நாகர்கோவில் போன்ற இடங்களில் பணிமனைகள் திறந்து வைக்க்கப்பட்டன. இதன்பின்னர். வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் பணிமனைகள் திறந்து வைக்கப்பட்டன. சகல பணிமனைகளிலும் அன்றிலிருந்து இன்றுவரை நாமும் பணிபுரிந்து வருகின்றோம்.

பணிமனைகளில் பொதுமக்களால் பதிவு செய்யப்படும் முறைபாடுகளை பதிவு செய்தல், அவற்றினை விசாரணை செய்தல், நீதிமன்றில் காவற்துறையால் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை நெறிப்படுத்துதல் போன்ற பணிகளை செய்வதுடன், காவற்துறையின் விசேட பணிகளான குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றத் தடுப்புப் பிரிவு போன்ற பிரிவுகளில் செயல்படுவதோடு, புலனாய்வு வேலைகளையும், காவல்துறை நடுவப்பணியகம் பணிமனைகள் என்பவற்றில் அலுவலகப் பணிகளையும் நீதிமன்றினால் விடப்படும் அழைப்பாணைகள், பிடியாணைகள் என்பனவற்றையும் செய்துவருகின்றோம். இவற்றைவிட பணிமனைகளால் மேற்கொள்ளப்படும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும் எமது பங்கு அளப்பரியது.

இவற்றுடன் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இடம்பெறும் பொது நிகல்ழ்வுகள், ஆலயத் திருவிழாக்கள், பாடசாலைகளின் முன்னால் வீதிப்போக்குவரத்து ஒழுங்கைப் பேணுதல் போன்ற விசேட கடமைகளையும் செய்துவருகின்றோம். மேற்கூறிய பணிகள் யாவற்றையும் இரவு பகல் பாராது மேற்கொண்டு வருகின்றோம்.

அண்மையில் மட்டகளப்பு, திருகோணமலைப் பிரதேசங்களிலும் எமது பெண் உறுப்பினர்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

தொடர்ந்தும் மக்கள் மத்தியில் ஏற்படும் குடும்பப் பிணக்குகள், கொடுக்கல் வாங்கல் பிணக்குகள். காணிப் பிணக்குகள், சிறு சிறு சண்டை சச்சரவுகள் போன்ற பிரச்சனைகளை பணிமனைகளிலே வைத்து இருதரப்பினருடைய சம்மதத்துடன் இணக்கம் கண்டு வருகின்றோம். இதில் ஆண்களை விட எமது பங்கே கூடுதலாக உள்ளது. குற்றவியல் வழக்குகளில் விசாரணைகளை மேற்கொண்டு, துப்புத்துலக்கி, சந்தேகநபர்களை கைதுசெய்து நீதி மன்றுகளில் வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றோம்.

■ இன்றைய காலப்பகுதிகளில் எந்தெந்தப்பகுதி பணிமனைகளில் பெண்களே தலைமைப் பொறுப்பேற்று நிர்வாக ஒழுங்கைக் மேற்கொண்டு வருகின்றனர்?

இன்றைய போர்க்காலச் சூழலில் எமது கட்டுப் பாட்டுப் பிரதேச எல்லைகள் குறுகி உள்ளதால், கடந்த காலங்களில் பணிமனைகளில் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண் உறுப்பினர்கள் பணிமனைகளின் பிரிவுப் பொறுப்புக்களையும், பதில் பொறுப்புக்களையும் ஏற்றுச் செய்துவருகின்றோம். நாம் பொறுப்புக்களை ஏற்று செயற்படுகையில் அங்கு பணிபுரியும் சகல உறுப்பினர்களும் எமது பொறுப்பின் கிழே வழிநடத்தப்படுகின்றனர். இன்னும் நீதிமன்றுகளில் வழக்குகளை நெறிபடுத்துதல், பணிமனைகளில் விசாரணைகளை நெறிப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்துவருகின்றோம்.

■ எந்த அடிப்படையில் உங்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கபடுகின்றன?

குற்றச் செயல்கள் தொடர்பாக தகவல் சேகரித்தல், வழக்குகளை கண்டுபிடித்தல், நீதிமன்ற கட்டளைகளை நிறைவேற்றுதல் மற்றும் எமது சேவைக் காலத்தின் போது ஒழுக்கம், கட்டுப்பாடு என்னும் விடயங்களில் எமது ஈடுபாடு எவ்வளவு ஆழத்திற்கு அமைந்துள்ளது என்பவற்றின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து, எமக்கு எழுத்து மூலமான பரீட்சை ஒன்று நடாத்தப்படுகிறது. இதில் சித்தியடைந்தவர்கள் நேர்முகப் பரீட்சையொன்றிற்க்கு அழைக்கப்படுகின்றனர். இதிலும் சித்தியடைந்தவர்களுக்கே பதவி உயர்வுகள் வழங்கபடுகின்றன.

அவசியமான காலங்களில் களமுனைக்குச் செல்லும் காவல்துறையினரின் பணிகள் அங்கு சிறப்பாக நடைபெற்றதாகவும், அவர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கலாம் எனவும் களமுனைத் தளபதிகள் சிபார்க செய்தால் அவ்வாறானவர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்குவதுண்டு.

■ உங்களது படிமுறை வளர்ச்சிகள் பற்றிக் கூறமுடியுமா?

காவற்துறையில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டும்போது இரண்டு படிமுறை நிலைகளிலேயே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். ஒன்று சாதாரண உறுப்பினர்கள், இரண்டு உப பரிசோதகர்கள். சாதாரண உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படும் உறுப்பினர்கள், நான் முன்பு கூறிய அடிபடியில் தகுதிகள் காணப்படின் தலைமைக் காவலராக பதவி உயர்த்தப் படுவர். இதன் பின்னர் உப பரிசோதகர், பரிசோதகர் என்ற நிலைக்கு உயர்த்தப்படுவர்.

உப பரிசோதகர்களாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் பரிசோதகராக பதவி உயர்த்தபடுகின்றனர். எமது படிமுறை வளர்ச்சியும் தற்போது பரிசோதகர் தரத்திலேயே உள்ளது.

■ பெண்கள் மீதான குற்றச்செயல்களில் எந்தவகையான குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றன?

காதலித்துக் கைவிடுதல், காதலித்து தாய்மையடையச் செய்து கைவிடுதல், காதலித்து உடலுறவு கொண்டு கைவிடுதல் போன்ற குற்றச் செயல்களே அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்க்குக் காரணம் அநேகமான பெண்கள் தங்களது உடலியல் பற்றிய விளக்கத்திற்கு வருவதற்கு முன்னரே சிறு வயதிலேயே ஏமாற்றப்படுவதே ஆகும். அண்மைக் காலங்களில் இன்றைய போர்ச் சூழலை தமக்கு சாதகமாக்கிக்கொண்டு சில ஆண்கள் தவறுகளைப் புரிந்துவிட்டு, இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்வதும், இடப்பெயர்வுகளைக் காட்டி நிரந்தர முகவரிகள் இல்லாமல் இடங்களை மாறி மாறி வாழ்வதே காரணமாகும். இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க விளையும்போது தாம் சடத்திலிருந்து தப்புவதற்காக சிலர் பெண்களிடம் இருக்கும் சில ஆதாரங்களையும் தந்திரமாகப் பெற்று அழித்துவிடுகின்றார்கள்.

இதனைத் தவிர்ப்பதற்கு பெண்கள் மத்தியில் ஒரு விழிர்ப்புணர்வை உருவாக வேண்டும்.

■ குற்றவாளிகளை கைது செய்யச் செல்லும்போது எந்த வகையான பிரச்சினைகளையாவது நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்களா?

தமிழீழத்தைப் பொறுத்தவரையில் குற்றவாளிகளை கைது செய்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பெண் உறுப்பினர்களாகிய நாம் பிரச்சனைகளை எதிர்கொள்வது மிக மிக அரிதே. பொதுவாக பெண்களை கைது செய்வதற்கே நாம் சென்ருவருகின்றோம். நாம் ஒருவரை கைது செய்யும்போது அவர் தொடர்பாக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டினை மிகவும் விளக்கமாக அவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அவர்களை எமது பணிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்விடயத்தில் எமது மக்கள் மிகவும் புரிந்துணர்வு உள்ளவர்கள். நாம் மேற்கூறிய முறையில் சம்மந்தப்பட்டவர்களை அணுகும்போது அவர்கள் எம்முடன் விசாரணைக்காக பணிமனைக்கு வருகின்றனர். சில சமயங்களில் கைது செய்யப்பட வேண்டியவர்களுடைய பெற்றோர், பாதுகாவலர் அல்லது வீட்டுக்காரருக்கு அவர்கள் என்ன பிரச்சினைக்காக எமது விசாரணைக்கு தேவைப்படுகிறார்கள் என்ற விடையத்தை அறிவித்தால் தாமாகவே சம்மந்தப்பட்டவர்களை கொண்டு வந்து எம்மிடம் முற்படுத்துகின்றனர்.

■ விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுடனான உங்களது அணுகுமுறைகள் எப்படியானவையாக அமைகின்றன?

எமது காவற்துறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சகலரும் தமிழீழ மக்களே. இவர்கள் சிங்கள இராணுவக் கெடுபிடிகளாலும், பொருளாதாரத் தடை என்பவற்றாலும் முகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களும் எமது உடன் பிறப்புக்களே. இவர்களுடன் அன்பாகவும், பாசமாக்கவுமே நாம் எமது அணுகுமுறைகளை மேற்கொள்கின்றோம்.

நாம் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக சகல கிராமங்களிலும் மக்கள் மத்தியில் ஏராளமான தகவலாளர்களை உருவாக்கி வைக்கின்றோம். அக்கிராமங்களில் ஏதாவது குற்றச் செயல்கள் நிகழ்ந்தால் தகுந்த ஆதாரங்களுடன் தகவல்களைத் திரட்டி எமக்குத் தருகின்றனர். இம்முறையானது குற்றச்செயல்கள் நிகழாது இருப்பதற்கான சிறந்ததொரு அணுகுமுறையாகவே நாம் பார்க்கின்றோம். நாம் பொதுமக்களை தகவலாளராக மாற்றி அவர்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்வதால் விசாரணைகளை இலகுவாகச் செய்யக்கூடிய நிலையில் இருக்கின்றோம். இந்த முறையானது விடுதலைக்குப் போராடுகின்ற எமது தேசம் எதிர் காலத்தில் குற்றச்செயல்கள் அற்ற ஆரோக்கியமான ஒரு தேசமாக அமைவதற்கு உதவுமென நான் பெரிதும் நம்புகின்றேன்.

■ ஒவ்வொரு குற்றவாளிகளும் சமூகத்தின் ஒவ்வொரு பிரதிநிதிகளே. அந்த வகையில் அவர்கள் தடுப்புக்காவலிருந்து வெளியே செல்லும்போது தாழ்வு மனப்பான்மையுடனோ, குற்றவுனர்வுடனோ வெளியேறலாம், அவர்களுக்கு நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?

எமது அமைப்பானது விடுதலைக்காகப் போராடும் ஒரு தேசிய இயக்கத்தின் உப அமைப்பாகும். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் எமது பிரதான கடமைகளில் ஒன்றுதான் காவல்துறைக்கு வரும் மக்கள் அனைவரையும் போராட்டத்தின்பால் பங்காளிகளாக்குவதாகும். அவர்கள் எமது தடுப்புக் காவலில் இருக்கும் பொது அவர்களுடன் ஏற்றத்தாழ்வுகள் எதுவுமின்றி பழகுகின்றோம். காவல்துரியின் மக்கள் தொடர்பாக உறுப்பினர்கள், தேசவிடுதலையுடன் கூடிய சமூஅக் விடுதலைக்கான கருத்துக்கள், அன்பு, ஆறாம் என்பவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

நாம் இப்படியான ஒரு உறவை இவர்களுடன் ஏற்படுத்திக் கொள்வதால் இவர்கள் வெளியேறும்போது தாழ்வு மனப்பான்மையோ, குற்ற உணர்வோ இல்லாமலேயே வெளியேறுகின்றனர். குற்றவாளிகள் என்று தண்டிகப்படுவோர் உயர்ந்த குணங்கள், பல சாதனைகள் படைக்கும் திறமைகள் என்பன அயர்ந்து கிடக்கும் உள்ளங்கள் படைத்தவர்கள். ஏதோ சூழ்நிலைகளின் காரணமாகவோ, வறுமையின் விளைவாகவோ பஞ்சத்தை தீர்க்கும் எண்ணங்கொண்ட வழிதவறி குற்றங்களை புரிகின்றனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக தகுந்த ஒழுக்கப் பயிற்சி கொடுத்து அவர்களது உள்ளத்தை உயர்த்திவிட்டால் அவர்களும் தேசத்தின் சிறந்த குடிகளாக திகழ்வார்கள். இவரு தகுந்த பயிற்சியளித்து குற்றவாளிகளை சீர்திருத்துவதுதான் சீர்திருத்தப்பள்ளிகளில் முக்கியமாக கவனிக்கப்படும் வேலையாகும். கல்வி அறிவில்லாதவர்களுக்கு கல்வி அறிவும், உழைப்பில் நாட்டமில்லாதவர்களுக்கு உழைப்பின் உயர்வையும் புகட்டி தன்மானம், சுயகெளரவம், பிறர்மீது அன்பு, தேசப்பற்று போன்ற நல்லியல்புகளை கற்பித்து அவர்களின் மனம் பண்படுத்தப்பட்டால் குற்றவாளிகளும் குணவான்களாக மாறுவது இயலாத காரியமில்லை.

சீர்திருத்தப்பள்ளிகள், கல்விச்சாலைகளாக இயங்கவேண்டும். சீர்திருத்தப்பள்ளிக்கு வெளியில் இருப்பவர்கள் அனைவருமே சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் குற்றவாளிகளைவிட ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள். உள்ளத்தில் கள்ளமில்லாதவர்கள். தூய்மையுடையவர்கள் என்று கூறிவிடமுடியாது. ஆதலால் குற்றவாளிகளை சமூகத்தின் கடைநிலையில் உள்ளவர்கள் என்று நாம் எண்ணுவதற்கு இடமில்லை.
மேலே சொல்லப்பட்ட சீர்திருத்தக் கொள்கையை எம்மால் முடியுமானவரை நடைமுறைப்படுத்துவதுடன் மிகவும் பரந்த அளவில் நிறுவனமயமாக்கப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

■ தமிழீழத் தேசத்திற்கான இந்தச் சேவைகளின் மூலம் எப்படியான ஒரு இலக்கினை அடையவேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்கள்?

தமிழீழ தேசம் விடுதலை அடையும்போது எதுவித குற்றச்செயல்களும் அற்ற உன்னதமான ஒரு சமூக அமைப்பு உருவாகும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இந்த இலக்கினை வைத்தே கெளரவ தேசியத் தலைவர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் ஒவ்வொரு செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

■ நீங்கள் ஒரு காவல்துறை பெண் உறுப்பினர் என்ற முறையில் சமூகத்தில் உள்ள பெண்களுக்கு என கூற விரும்புகின்றீர்கள்?

இன்றைய எமது போராட்டம் தேசிய விடுதலைக்காக மட்டுமன்றி பெண் விடுதலையையும் உள்ளடக்கியதாக உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போராட்டத்திற்கு கெளரவ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கின்றார். இதனையிட்டு தற்காலப் பெண்கள் பெருமிதம் அடைய வேண்டும். இதுவரை காலமும் சமூக ஒடுக்குமுறைகளுக்கும், மூடநம்பிகைகளுக்கும் இலக்காகியிருந்த தமிழீழப் பெண்கள் தற்போது விழிப்படைந்து களமுனைகளிலும் பல சாதனைகள் படைத்து வருகின்ற இந்தக் காலகட்டத்திலும் கூட எமது சமூகத்தில் பல பெண்கள் வெளியில் வரத் தயங்குகின்றனர். அவர்களும் விழிப்படைய வேண்டும். தம்மைத்தாமே காப்பாற்றும் வலுவுள்ளவர்களாக மாறவேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தமக்கென நீதியை நிலைநாட்ட சட்ட ஒழுங்குகள் இருக்கின்றன என்பதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இலையெனில் தெரிந்தவர்கள் மூலமாவது அறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக தமக்குச் சாதகமாக தம்மிடமுள்ள ஆதாரங்களை கைவிடாது அவற்றை நீதி மன்றங்களில் சமர்பிக்க முன்வரவேண்டும்.

எனவே எந்தவொரு பெண்ணும் தாம் செய்யப்போகும் எந்தக் காரியமாக இருந்தாலும் ஆழ்ந்துயோசித்து அதனால் ஏற்படப்போகும் நன்மை. தீமைகளை அறிந்து செயல்ப்பட்டு வந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகாமல் தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதை அவர்களுக்குக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

தொகுப்பாக்கம்:-
எரிமலை (தை 2001)