பேசாலைத் தேவாலயப் படுகொலை – 17 .யூன்.2006


2006 ஜீன் 17ஆம் நாள் அதிகாலை மன்னார் பேசாலைக் கடற்பரப்பில் ஸ்ரீலங்காக் கடற்படையினருக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியை அடுத்து பேசாலையிலுள்ள தமிழ்க் குடிமக்களை பழிவாங்கத் தொடங்கினார்கள். தமிழர்கள் வெற்றிநாயகி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தார்கள். கடற்சண்டையில் தோற்கடிக்கப்பட்ட கடற்படையினர் பேசாலைப் பகுதியைச் சுற்றிவளைத்து கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டார்கள். அவ்வாறாக சுட்டுக்கொண்டு வந்த இராணுவத்தினர் தேவாலயத்தினுள்ளே திரண்டு நின்ற மக்கள் மீது கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள். அதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். கடலில் நிகழ்ந்த மோதலைப் பார்ப்பதற்காக கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் மீதும் கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். 05 மீனவர்கள் அவர்களது படகுகளுக்கு உள்ளேயே இறந்து கிடக்க காணப்பட்டனர். கரையிலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிறிலங்காக் கடற்படையினரால் தீ மூட்டப்பட்டுள்ளன. 40படகுகளும் 25வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. 10மில்லியன் பெறுமதியான மீன்பிடி வலைகளும் எரிக்கப்பட்டுள்ளன.