இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956
1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத்தித்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றத் திட்டம், அல்லைக் குடியேற்றத்திட்டம் போன்ற குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு காவற்துறை – இராணுவம் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அத்துடன் விகாரைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பௌத்த விகாரைகளில் பெரிய காண்டாமணி பொருத்தப்பட்டு மணியோசை கேட்கும் தூரம் மட்டும் சிங்கள பௌத்தர்களுக்குரிய பிரதேசமாக உத்தியோகப் பற்றற்ற வகையில் கணிக்கப்பட்டது. இநத் வகையில் தமிழ்மக்களிற்கு சொந்தமான நிலங்கள் சூறையாடப்பட்டன.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காலஞ் சென்ற எஸ். டபிள்யூ.ஆர்.டி பணட்ரநாயக்கா இலங்கையின் பிரதமரானார். அவரது தேர்தல் வாக்குறுதிகளிலொன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கு எதிராக அக்காலகட்டத்தில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது எதிர்ப்பைத் தெரிவித்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட முடிவுசெய்தது. இதன் விளைவாக அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி 1956ம் ஆண்டு யூன் மாதம் 05ம் திகதி கொழும்பிலுள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு முன்னால் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தியது. இதில் தமிழ்த் தலைவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் கலந்துகொண்டார்கள். அக்கால கட்டத்தில் புகழ் பெற்றிருந்த தமிழ் கல்விமான் வணபிதா தனிநாயகம் அடிகளும் இந்தச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். அன்றைய தினம் சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டதுடன், சிங்களவர்களால் தமிழர்கள் மீதான இனக்கொலை தூண்டி விடப்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். பல தமிழ் மக்கள் மோசமான வகையிலும், கோரமாகவும் கொல்லப்பட்டதுடன், கொழும்பிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் கொள்ளையடிக்கபட்டபின் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இலங்கைத்தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வு மேலோங்கிக் காணப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் குடியேற்றபட்ட சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார்கள். இதில் இங்கினியாகலை என்ற இடத்திலிருந்த கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த நூற்றிஐம்பது தமிழ்த் தொழிலாளர்கள் அதே தொழிற்சாலையில் வேலை செய்த சிங்களத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டார்கள். பலர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அரை குறை உயிருடன் இருந்தவர்களும் இறந்தவர்களும் எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டார்கள். இங்கு நடைபெற்ற இனப் படுகொலையே இங்கினியாகலை இனப் படுகொலையென வர்ணிக்கப்படுகின்றது. இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முதலில் பெருந் தொகையாகத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகும்.
இப்படுகொலைகளில் ஏறக்குறைய நூற்றிஐம்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக “Emergency 58” என்ற நூல் தகவல் வெளியிட்டுள்ளது.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 நூல்.