1981ஆம் ஆண்டு இனப்படுகொலை – யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி


1981ஆம் ஆண்டு மே மாதமும் யூன் மாதமும் வடகிழக்கில் கொந்தளிப்பான அரசியற் சூழ்நிலைகள் காணப்பட்டன. அதன் காரணம் 1981ஆம் ஆண்டு யூன் மாதம் நான்காம் திகதி வடகிழக்கில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான  தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டமை ஆகும். இந்தத் தேர்தல் தொடர்பாகப் பரப்புரைக் கூட்டங்கள், பரப்புரைகள், கொள்கை விளக்கக் கூட்டங்கள் என்பன

ஆங்காங்கே தீவிரமாக இடம்பெற்றன. இந்தத் தேர்தற் பரப்புரைக் கூட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐ.தே.கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஏனைய சுயேட்சைக் குழுக்கள் என்பன ஈடுபட்டிருந்தன. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி இறைகுமாரன், உமைகுமாரன் (அளவெட்டி) போன்ற தீவிர கருத்துள்ள இளைஞர்களைக் கொண்ட இளைஞர் பேரவை விடுதலை அணியும் காலஞ்சென்ற வைத்திய கலாநிதி டாக்டர் தர்மலிங்கம், காலஞ்சென்ற ஊடகவியலாளர் கோவை மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்  போன்றோரது தலைமையிலான தமிழீழ விடுதலை அணியும் கூட்டாக இணைந்து தீவிரமாகப் பரப்புரைப் பணிகளில் ஈடுபடலானார்கள்.

இந்நிலையில் ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடம் ஓர் உயர்மட்ட அமைச்சர் குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தது. ஜே.ஆர் அரசாங்கத்தால் நயவஞ்சக நோக்கத்தோடு அனுப்பி வைக்கப்பட்ட இந்தக்குழுவில் மகாவலி அபிவிருத்தித்திட்ட அமைச்சர் காமினி திஸாநாயக்கா, விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ போன்ற அமைச்சர்களோடு சில பிரதி அமைச்சர்களும் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் தங்கியிருந்தார்கள். இவர்களோடு யாழ்ப்பாண நகர் எங்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற காவற்றுறையினரும் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டனர். முப்படைகளும் யாழ்ப்பாண நகர் எங்கும் பரவலாக நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களைவிடப் பெருந்தொகையான சிங்களக் குண்டர்கள், காடையர்கள் தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்ரேடியத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாண நகரை எரியூட்டுவதற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

1981 மே 31ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம்

 

இவ்வாறாக யாழ்ப்பாண நகரம் ஒரு கொதிநிலையில் இருந்தபோது 1981ஆம் ஆண்டு மே மாதம் முப்பத்தோராம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோயிலுக்கு முன்னால் அப்போதைய யாழ்ப்பாண மாநகரசபை மேஜர் திரு. இராசா விஸ்வநாதன் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக்கு கூட்டணிப் பிரமுகர்கள் உரையாற்றினார்கள். அவ்வாறு உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அடையாளம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு சிங்களக் காவற்றுறையினன் கொல்லப்பட்டார். இன்னொரு சிங்களக் காவற்றுறையினன் காயப்பட்டார். கனகசுந்தரம் எனும் தமிழ்க் காவற்றுறையினனும் காயமடைந்தார். காயமடைந்த இந்தக் காவற்றுறையினன் ஆகாயத்தை நோக்கிச் சகட்டு மேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். பொதுமக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

இதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த யாழ்ப்பாணக் காவற்றுறை நிலையத்தைச் சேர்ந்த சிங்களக் காவற்றுறையினர் நாச்சிமார் கோயிலுக்குத் தீ மூட்டினார்கள். ஆலய சுற்றாடலில் நின்ற மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆலயத்திற்கு உள்ளே நின்ற பக்தர்கள் காவற்றுறையினரின் துப்பாக்கிப் பிடிகளாற் தாக்கப்பட்டார்கள். பலர் படுகாயமுற்றார்கள். ஆலயத்திற்குள்ளே இருந்த விக்கிரகங்கள், சுவாமி காவும் வாகனங்கள் தாக்கப்பட்டன. கருட வாகனத்தின் ஒரு சிறகு உடைக்கப்பட்டது. நந்தி வாகனத்தின் கழுத்து வெட்டப்பட்டது. ஆலயத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தேர் முட்டியும், தேரும் தீ மூட்டி எரிக்கப்பட்டன. நாச்சிமார் கோயில் சுற்றாடலிலிருந்த வீடுகள், கடைகள், வீட்டு வேலிகள் என்பன எரிக்கப்பட்டன. அமைதிச் சூழல் நிலவும் ஆலய சுற்றாடல் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதன் பின்னர் யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்த சிறிலங்காக் காவற்றுறையினர் யாழ்ப்பாண நகருக்குத் தீ மூட்டினார்கள். யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்குக் கிழக்குப் பக்கத்திலிருந்த கடைகள் உடைகக் ப்பட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுத் தீ மூட்டப்பட்டன. யாழ்ப்பாணம் பழைய சந்தைக் கட்டடம் பாய் விற்கும் கடைகள், பலசரக்குக் கடைகள் என்பன தீ மூட்டி எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண நகரிலிருந்த மதுபானக ; கடைகள் உடைக்கப்பட்டு மது அருந்திய சிங்களக் காவற்றுறையினரும் குண்டர்படையும் நகருக்குத் தீமூடடி; யதோடு அடாவடித்தனமும் செய்தார்கள்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்னாலிருந்த மகாத்மா காந்தி சிலை, யாழ்ப்பாணம் நவீன சந்தைக்கு முன்னாலிருந்த சோமசுந்தரப்புலவர் சிலை, யாழ்ப்பாணம் ஹட்டன் நெசனல் வங்கிக்கு முன்னாலிருந்த திருவள்ளுவர் சிலை, யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியிலிருந்த ஒளவையார் சிலை என்பன அடித்து நொருக்கப்பட்டன.  யாழ்ப்பாணம் முற்றவெளியிலிருந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் நினைவுத் தூபிகள் சிதைக்கப்பட்டன. உரும்பிராய்ச் சந்தை வளவிலிருந்த தியாகி சிவகுமாரனுடைய உருவச்சிலை பலாலியிலிருந்து வந்த இராணுவச் சிப்பாய்களால் சங்கிலி போட்டு பிணைக்கப்பட்டு இராணுவ றக் ஒன்றினால் இழுத்து வீழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாண நகரத்தில் அடாவடித்தனங்களிலும், மது போதையில் தீவைத்தலிலும் ஈடுபட்டு புடவைக் கடைகளையும், வர்த்தக நிலையங்களையும் தீயிட்டுப் பொசுக்கிய சிங்களக் குண்டர்கள் அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக நகர்ந்து வேம்படி வீதிச் சந்திக்கு வந்து அங்கிருந்த கடைகள் எல்லாவற்றிற்கும் தீயிட்டுக் கொழுத்தினார்கள். இதன் பின்னர் பருத்தித்துறை வீதி வழியாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டுக்குச் சென்று அவரிடமே அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். நிலைமையைப் புரிந்துகொண்ட யோகேஸ்வரன் தன் வீட்டுப் பின் மதிலால் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு ஓடி மயிரிழையில் உயிர்தப்பினார். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் வீட்டினுள்ளேயிருந்த அவரது காரியாலயமும் சிங்களக் குண்டர்களால் தீயிட்டுப் பொசுக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. திரு. யோகேஸ்வரன் அவர்கள் 1981ஆம் ஆண்டு யூன், யூலை மாதம் வெளியான இந்தியா டுடே சஞ்சிகைக்கு அளித்த செல்வியில் தனது வீட்டைக் கொளுத்தியவர்கள், கட்டைக் காற்சட்டையும் அரைக்கை பெனியனும் அணிந்து மதுபோதையிற் காணப்பட்டார்கள், என்றும் அவர்கள் சிங்களத்தில் கதைத்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

யோகேஸ்வரனது வீட்டைத் தரைமட்டமாக்கிய குண்டர்கள் அங்கிருந்து பிரதான வீதிக்கு சென்று பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைச் செயலகத்தை தீமூட்டிக் கொளுத்தினார்கள். அத்தோடு அங்கிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் உத்தியோகபூர்வ நாளேடான உதயசூரியனைத் தீமூட்டிக் கொளுத்தினார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைச் செயலகத்திற்கு தீ மூட்டியபோது அதன் அருகிலிருந்த ஏனைய கட்டடங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் மருத்துவர் செபஸ்தியாம்பிள்ளையுடைய கட்டடம், மருத்துவர் ஏபிராம் உடைய கட்டடம் உட்பட இன்னும் சில கட்டடங்களும் பாதிக்கப்பட்டன.

யாழ். நூல் நிலையம், ஈழநாடு நாளேட்டுப் பணிமனை எரிக்கப்படல்.

இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற மறுநாள் யாழ்ப்பாணம் மாநகரசபைக்குச் சொந்தமான யாழ். பொதுநூலகம் தீமூட்டி எரிக்கப்பட்டது. அங்கிருந்த உசாத்துணை நூல்கள், இரவல் வழங்கும் பகுதி, சிறுவர் பிரிவு, இன்னும் பல பழைய ஓலைச்சுவடிகளென எல்லாமாக கிடைத்தற்கரிய கருவூலமாகப் பேணப்பட்டு வந்த தொண்ணூற்று மூவாயிரம் நூல்கள் தீயில் எரிந்து போயின. யாழ்ப்பாண நூல் நிலையம் எரிவதை யாழ். ஆயர் இல்ல மேல்மாடியிலிருந்து பார்த்த வணபிதா தாவீது அடிகளார் அநத் இடத்திலேயே மாரடைப்பால் மரணமானார். நூல் நிலையத்திற்குத் தீமூட்டிய தீயவர்கள் அங்கிருந்து சென்று மானிப்பாய் வீதியிலுள்ள ஈழநாடு பணிமனைக்குத் தீமூட்டினார்கள். அப்போது அங்கே இரவுக் கடமையிலிருந்த ஈழநாடு ஊழியர்களான சிவானந்தம் அவர்களும், ஐயா சச்சிதானந்தம் அவர்களும் எரிகாயங்களுக்கு இலக்கானார்கள். இவை நடைபெற்றது 1981ஆம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியாகும். இதன் பின்னர் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தக் குண்டர்கள் திருநெல்வேலியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைச் செயலகத்தினுள் நுழைந்தனர். இது யூன் மாதம் இரண்டாம் திகதி அதிகாலை இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருநெல்வேலிப் பணிமனையில் தங்கியிருந்த பாலஜோதி என்ற இளைஞனைச் சுட்டுக் கொன்றார்கள். கோப்பாயைச் சேர்ந்த விவசாய விரிவாக்க உத்தியோகத்தரான பரமேஸ்வரன் என்ற இளைஞன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். குடாநாட்டின் பல பகுதிக்கும் சென்ற சிறிலங்காப் பொலிசார் அச்செழு என்ற இடத்தில் சண்முகம் என்ற சலவைத் தொழிலாளியை வீதியில் வைத்துச் சுட்டுக்கொன்றார்கள்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலில் ஒரு ஆசனத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த காமினி திஸாநாயக்காவும், சிறில் மத்தியூவும் பெருமுயற்சி செய்தார்கள். 1981ஆம் ஆண்டு யூன் மாதம் நான்காம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் ஆறு வாக்குப் பெட்டிகள் காணாமற்போயின. இதற்கு ஐ.தே.கட்சி அமைச்சர்களே காரணம். அவர்களால் ஒரு ஆசனத்தைக் கூடப் பெறமுடியவில்லை. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் எல்லா ஆசனத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியே கைப்பற்றியது.

இலங்கைக்கு 1931ஆம் ஆண்டு டொனமூர் குழுவின் பரிந்துரைப்படி  சர்வசன வாக்குரிமை அளிக்கப்பட்டது. இலங்கைக்கு சர்வசன வாக்குரிமை அளிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவுப் பூர்த்தி பொன்விழாவை 1981ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசாங்கம் இவ்வாறு கொண்டாடியது. அதே ஐ.தே.கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களாலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு வாக்குச்சீட்டுப் பெட்டிகளும் களவாடப்பட்டன என தேர்தலைக் கண்காணித்த பக்கச் சார்பற்ற குழுவினர் தெரிவித்தனர்.

 

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.