யாழ். கைதடி மனிதப் புதைகுழி -06,07,08 யூன் 2006
இலங்கையின் வடபகுதியில் காணப்படும் மாவட்டங்களில் அதிகளவு மக்கள் செறிவைக் கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஏ-9 நெடுஞ்சாலையில் யாழ் நகரில் இருந்து 10கிலோ மீற்றர் தூரத்தில் கைதடிப் பிரதேசம் அமைந்தள்ளது. 1996ஆம் ஆண்டு யாழ்குடா நாட்டினை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்ததன் பின்னர் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காணாமற்போயிருந்தனர். அப்போது அவர்களில் சிலர் கைதடியை அண்மித்த செம்மணிப்பகுதியிலிருந்து எலுப்புக்கூடுகளாக மீட்கப்பட்டனர். அதே போல கைதடித் தரவை வெளியில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 06.06.2006 அன்று கைதடித் தரவைப்பகுதிக்கு மண் அகழ்விற்காகச் சென்றவர்கள் அப்பகுதிக்குள் புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றைக் கண்டு அது தொடர்பாக தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ளுமாறு சாவகச்சேரி மாவட்ட நீதவானால் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் பொலிசாரும் பொதுமக்களுமாக அப்பகுதியில் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக இப்பணி இடம்பெற்றது. இதில் நான்கு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் யாழ்.குடா நாட்டில் பரவலாக காணாமற்போனோர் இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். காணமற்போனோரின் உறவினர்கள் தமது உறவுகளின் நிலை தெரியாது கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றார்கள்.