மன்னார். வங்காலைப் படுகொலை -08 யூன் 2006
வங்காலைக் கிராமமானது மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவில்; கடற் கரையோரமாக அமைந்துள்ளது. இக் கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். இங்கு சுகந்தபுரி, தோமஸ்புரி, பஸ்புரி போன்ற சிறு கிராமங்கள் காணப்படுகின்றன. தோமஸ்புரியில் வசித்துவந்த மார்ட்டின் என்பவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் இலங்கை இராணுவத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
மேற்படி சம்பவமானது 08.06.2006 அன்று இரவு தோமஸ்புரியிலுள்ள அவர்களின் வீட்டில் இடம் பெற்றுள்ளது. தச்சுத் தொழிலாளியான மார்ட்டின் என்பவர் தச்சுத் தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகளாலேயே படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட பின்னர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் பிள்ளைகள் இருவரும் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்ட பின்னர் தந்தையும் பிள்ளைகளும் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர். இச்சம்பவத்திற்கு நேரடியான சாட்சியங்கள் இல்லாவிடினும் இராணுவச் சப்பாத்துத் தடயங்கள் அதிகளவு காணப்படுகின்றமையும் அப்பகுதியில் சம்பவதினம் இரவு இராணுவ நடமாட்டம் காணப்பட்டதையும் அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்துகின்றனர்.