மட்டு.வடமுனை நெடுங்கல் படுகொலை – 07 யூன் 2006
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வடமுனையும் ஒன்றாகும். இது வெலிக்கந்தையிலிருந்து 07கிலோமீற்றர் தூரத்திலும் வாழைச்சேனையிலிருந்து 35கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் குறைவடைந்திருந்தாலும் மகிந்த ராஜபக்ச சனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தமிழ் மக்கள் மீதான தாக்கதல்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. நாளுக்கு நாள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே மட்டக்களப்பு வடமுனைப் படுகொலையும் அமைந்துள்ளது. 07.06.2006 அன்று காலை 10மணியளவில் வடமுனையிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக உழவு இயந்திரத்தில் 20பொதுமக்கள் வரை பயணித்துக் கொண்டிருந்தனர். நெடுங்கல் எனும் இடத்தில் இவர்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையினரால் கண்ணிவெடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தில் ஆறு மாதக் குழந்தை உட்பட 10பேர் உயிரிழந்ததுடன் 03குழந்தைகள் உட்பட 09பேர் படுகாயமடைந்தனர். இப்படுகொலையானது, ஒரு திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது. எல்லைப்புறக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி சிங்கள மக்களை குடியேற்றும் ஒரு செயற்பாட்டிற்கான ஆரம்பமாகவே நோக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இவ் வடமுனைப்பகுதி மக்கள் இலங்கை இராணுவத்தால் பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வந்தனர். 1990ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் இப்பகுதி மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். 1995ஆம் ஆண்டின் பின்னர் மக்கள் இங்கு மீளக்குடியமரத் தொடங்கினர். 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் மக்கள் இங்கு பெருமளவில் குடியேறத் தொடங்கினர். ஆனால் மீண்டும் தமக்கு அந்நிலை ஏற்படுமோ என்ற ஏக்கத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.