யாழ். தீவகப் படுகொலை – 13 மே 2006


இலங்கையின் வடபுலத்தில் உள்ள யாழ்மாவட்டத்தின் தீவகப்பகுதியானது யாழ்நகரில் இருந்;;து தென்மேற்காக 15 கிலோ மீற்றர் துராத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசம் இலங்கை கடற்படையினரது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் அல்லைப்பிட்டி சோதனைச்சாவடியில் மக்கள் அடையாள அட்டை, உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே தொடர்ந்து செல்ல

அனுமதிக்கப்பட்டு வந்தனர். இப்பிரதேசத்தில் கடற்படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றனர். இலங்கையின் புதிய சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தமிழ்மக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் ஒரு அங்கமாக அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய இடங்களில் 13-05-2006அன்று இடம்பெற்ற படுகொலைச்சம்பவமானது அமைகின்றது. யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் 13-05-2006அன்று இரவு அல்லைப்பிட்டி பிலிப்நேரியார் தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள செல்லத்துரை அமலதாஸ் என்பவரது வீட்டில், அயலிலுள்ள மக்களும் இராணுவ அச்சம் காரணமாக தங்கியிருந்தனர். அவ்வேளை அப்பகுதிக்கு வாகனங்களில் வந்த கடற்படையினர் அப்பகுதி வீடுகளிற்குள்; சென்று மின் விளக்குகளை அணைத்து விடுமாறு ஒட்டுக்குழுக்கள் மூலம் மிரட்டினர். பின்னர் அமலதாஸ் என்பவரது வீட்டிற்குச் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் அவ்வீட்டில் தங்கியிருந்த 11 பேரில் 08பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் உள்ளடங்குவர். இதில் தமது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த 04 மாதச்சிறுவனும் நான்கு வயதுச் சிறுவனும் பரிதாபகரமாக உயிரிழந்தார்கள். காயமடைந்த ஏனையோரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாததால் காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார். இதே வேளை சில கடற்படையினர் புளியங்கூடலிலுள்ள சண்முகலிங்கம் என்பவரது வீட்டுக்குள் புகுந்து அக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைச் சுட்டுக்கொன்றனர். அடுத்தாக வங்களாவடி என்ற இடத்தில் தேனீர்ச்சாலை உரிமையாளரான செந்தூரன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து செந்தூரன் என்பவரைச் சுட்டுக்கொன்றனர். இவ்வாறாக அன்றிரவு 14 வரையான பொதுமக்கள் வரை உயிரிழந்தனர். பல பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டனர். பல கடைகள், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.