யாழ்.புத்தூர் படுகொலை – 18. ஏப்ரல்-2006


புத்தூர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம். புத்தூரைச் சேர்ந்த கண்ணன் என்னும் முச்சக்கரவண்டி சாரதி தமது வர்ணம்தீட்டும் நண்பரை வழமையாக வேலை முடிவடைந்ததும் அவரது வீட்டில் இறக்கிவிடுவார். வழமைபோல் ஏப்ரல் 18ஆம் நாள் தமது வர்ணம்தீட்டும் நண்பரை அவரது வீட்டில் இறக்கிவிடுகிறார். அந்த முச்சக்கரவண்டியில் மேலும் மூன்று நண்பர்கள் உல்லாசமாக பிரயாணம் செய்வதற்காக சென்றனர். முச்சக்கரவண்டி தாண்டிச் சென்ற கடையில்நின்ற நபர்கள் அந்த வண்டி நிறைய ஐந்து நண்பர்களும் அடுக்கி ஏற்றிக்கொண்டு கடையை தாண்டி வர்ணம்தீட்டும் நண்பரை இறக்கிவிடுவதற்கு சென்றதையும், பின்பு வர்ணம்தீட்டும் நண்பரை தவிர ஏனைய நான்கு நண்பர்களும் திரும்பி சென்றதையும் கண்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் முச்சக்கரவாகனத்தின் பின்னால் வந்ததையும் பின்பு அதை நிறுத்தி திருப்பி அனுப்பியதையும் கடையில் நின்ற நபர்கள் கண்டிருக்கின்றார்கள். அந்தவேளையில் வேறு ஒரு நபர் சைக்கிளில் வந்து கடையடியில் இறங்கி சீனி வாங்கிக்கொண்டு முச்சக்கரவண்டி சென்ற பக்கமாக தமது வீட்டுக்குத் திரும்பிச் சென்றதையும் கண்டார்கள். இரவானதும் தமது மகன் கண்ணன் வீடு திரும்பாததால் அவரது தகப்பன் அவரை தேடிசென்றபோது மகனின் உடலத்தையும் முச்சக்கர வண்டியையும் றோட்டில் கண்டார். ஆரம்பத்தில் மிகுதி நான்கு நண்பர்களையும் தேடிப்பார்ப்பதற்காக அப்பகுதிக்குச் செல்ல ஸ்ரீலங்கா இராணுவம் எவரையும் அனுமதிக்கவில்லை. ஈற்றில் தேடிப்பார்ப்பதற்கு மக்கள் அனுமதி பெற்றுப் போனபோது நான்கு நண்பர்களினதும் கடையில் சீனி வாங்கிய நபரினதுமாக ஐந்து சடலங்களை றோட்டோரமாக இருக்கும் வயலிலிருந்து மீட்டெடுத்தனர்.

 

 


சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரம் வருமாறு 

01.கந்தசாமி கௌரிபாலன் 32

02.செல்லன் கமலதாசன் 25

03.தங்கராசா கவீந்திரன் 23

04.மகாதேவன் கிசோக்குமார் 22

05.சுப்பிரமணியம் கண்ணதாசன் 27