மிருசுவில் படுகொலை 19.12.2000
யாழ். மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தில் “படித்த மகளிர் குடியேற்றத்திட்டம்” என்று சொல்லப்படுகின்ற மிருசுவில் கிராமம் அமைந்துள்ளது. முகமாலைப் பகுதியிலிருந்து யாழ். நகர்நோக்கி மேற்குப் புறமாக மூன்று கி.மீ. தூரத்தில் மிருசுவில் கிராமம் அமைந்துள்ளது. 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தென்மராட்சியின் பல பாகங்களிலும் கடுமையாக நடந்த சண்டைகளால் தென்மராட்சிப் பகுதி மக்களிற் பெரும்பாலானோர் வடமராட்சியின் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். இதில் ஒரு பகுதியினர் மிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத்திட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வடமராட்சி கரவெட்டியில் அமைந்துள்ள நாவலர் மடப் பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். 19.12.2000 அன்று மிருசுவிலிருந்து இடம்பெயர்ந்து வடமராட்சி கரவெட்டியில் தங்கியிருந்த ஒன்பது பேர் தமது வாழ்விடங்களைப் பார்வையிடச் சென்றனர். அங்கிருந்த தமது வாழ்வியலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவேளை ஒன்பது பேரையும் கைது செய்த இராணுவத்தினர் கண்களை கட்டி சித்திரவதை செய்தனர். ஒன்பது பேரில் ஒருவர் தப்பி மந்திகைப் பகுதிக்கு வந்து ஏனையவர்களின் உறவினரிடம் எட்டுப்பேரின் நிலைமையினையும் தெரிவித்தார். காணாமற்போனவர்களின் உறவினர்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து அச்சம்பவத்திற் தப்பிவந்த பொன்னையா மகேஸ்வரன், மற்றும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்ட இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ். ரத்னநாயக்காவும் கொடுத்த தகவலின் பேரில் அப்போதைய யாழ். காவற்றுறை அத்தியட்சகர் உபாலி குணசேகர, உதவிக் காவற்றுறை அத்தியட்சகர் நிமல் ஸ்ரீநாத், சாவகச்சேரி நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், பருத்தித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி கதிரவேற்பிள்ளை ஆகியோர் முன்னிலையில் அடையாளம் காட்டப்பட்ட மனிதப் புதைகுழி 25.11.2000 அன்று மாலை 3.30 மணியளவில் தோண்டப்பட்டது. புதைகுழி தோண்டும் போது இரண்டு அடி ஆழத்தில் சடலங்கள் தென்பட்டன. அப்பகுதியிற் காணாமற்போன எட்டுப் பேரது உடல்களும் வெட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன.
மிருசுவில் சம்பவம் தொடர்பாக மரண விசாரணை நடத்திய பருத்தித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி கீழ் வருமாறு
(29.12.2000 வீரகேசரி) தகவல் கொடுத்தார். வீரகேசரி) தகவல் கொடுத்தார். வீரகேசரி) தகவல் கொடுத்தார். வீரகேசரி) தகவல் கொடுத்தார். “தப்பி வந்த பொன்னையா மகேஸ்வரனும், லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ். ரட்ணாயக்காவும் அடையாளம் காட்டிய எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்த மனிதப் புதைகுழியைத் தோண்டியபோது இரண்டடி ஆழத்தில் மனிதனின் முழங்கை ஒன்று தென்பட்டது. அதைச்சுற்றி மண்ணை அவதானமாக அப்புறப்படுத்திய வேளை மரக்கட்டை காணப்பட்டது. மனித சடலத்தின் தலை ஒன்றும் காணப்பட்டது. அதை அவதானமாக எடுத்தபோது இருபத்தொரு வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் காணப்பட்டது. இச்சடலம் சிவப்பு வெள்ளை நிறச்சாறியினால் சுற்றப்பட்டிருந்தது. இரண்டாவதாகச் சிறுவனின் சடலம் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் சடலங்கள் எடுக்கப்பட்டன. சிறுவனின் சடலம் மேற்றோல் உரிந்து றோஸ் நிறமாகக் காணப்பட்டது. கூரிய ஆயுதத்தால் குரல் வளைகள் வெட்டப்பட்ட நிலையிலும், கால், தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் சடலங்கள் காணப்பட்டன.எனத் தெரிவித்தார்.
படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான வாக்குமூலங்கள்
வெலிஓயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒதியமலைக் கிராமம் தொடர்பாக அக்கிராம வாசியான சிவசேகரம் சத்தியநாதன் அவர்களின் ஒதியமலைப் படுகொலைகள் தொடர்பான சுருக்கக் குறிப்பு.
“நான் பிறந்து வளர்ந்த பூர்வீகக் கிராமம் வெலிஓயா எனச் சொல்லப்படும் சிங்களக் குடியேற்றத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலைக் கிராமம் ஆகும். அதற்கு அடுத்தாற்போல் பெரியகுளக் கிராமமும் காணப்படுகின்றது. 1984ம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம்; திகதியன்று வெலிஓயாக் கிராமச் சிங்களக் காடையர்களும், சிறிலங்கா இராணுவத்தினரும் இணைந்து ஒரே இடத்தைச் சேர்ந்த இருபத்தேழு அப்பாவிப் பொதுமக்களையும், அதற்கு முதல் நாள் ஐந்து பொதுமக்களையும் கைதுசெய்து சென்றனர். கென்பாம் என்கின்ற இடத்தில் வைத்து இவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். அதன் தொடராக இவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வருவதும் கண்ணிற்படுபவர்களைப் பிடித்துச் சுடுவதுடன், இங்கு வசித்த தமி;ழ் மக்களின் பொருட்களைக் கொள்ளையடிப்பதும், வழக்கமாக இருந்தது. குறிப்பாக விளைபொருட்களையும் விவசாய இயந்திரங்கள், துவிச்சக்கரவண்டிகளென என்னவாக இருந்தாலும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். இவ்வாறான அட்டூழியங்கள் இடம்பெற்று வரும்வேளை குறிப்பாக 1986ம் ஆண்டு பங்குனி மாதம் இருபத்தாறாம் திகதி காட்டுப் பகுதியால் வந்த இராணுவத்தினர் மாலை 3.00 மணியளவில் திருகோளம் என்று சொல்லப்படும் இக்கிராமத்தில் சுப்பிரமணியம் என்பவரின் கடைக்குள் வைத்து கார்த்திகேசு விசுவலிங்கம், பழனியாண்டி செல்லத்துரை என்ற இருவரையும் உயிருடன் கடைக்குள் வைத்துத் தீமூட்டி எரித்த சம்பவம் நடந்தது. இச்சம்பவம் நடந்ததால் பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த அப்புத்துரை என்பவர் அவருக்குச் சிங்களம் தெரியுமாதலால் அந்தக் காடையர்களிடம் சென்று “ஏன் இவ்வாறான அநியாயம் செய்கிறீர்கள், யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது” என்று கேட்டதற்காக அவரின் வாய்க்குள் துப்பாக்கியாற் சுட்டு ஜெயம் என்பவரின் வீட்டிற்குள் போட்டு எரித்ததுடன், தொடர்ச்சியாக அப்பகுதியிலிருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட வீடுகளை எரித்த பின்னர் படையினர் காடுகளுக்குள் பதுங்கியிருந்தார்கள். அதற்கு அடுத்தநாள் விடியற்காலை பதவியாப் பகுதியிலிருந்து வாகனங்களில் இராணுவத்தினர் வந்ததைத் தொடர்ந்து நெடுங்கேணிப் பிரதேசத்தைச் சுற்றிவளைத்தனர். இதன்போது இராணுவம் கிராமத்துள் இருக்கிறதா இல்லையா எனத் தெரியாமல் வந்த பல அப்பாவி மக்கள் அதனிடம் மாட்டிக்கொண்டார்கள். அப்படி வந்தவர்களிற் பலர் சுடப்பட்டார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் வினாசிக்குளத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவரும் அவருடைய இளைய மகனும் என்னுடைய கடைக்கென வந்தவிடத்தில் அந்த நேரம் நானும் எனது உறவினரான இராஜரட்ணம் என்பவரும் ஓரிடத்தில் ஒளிந்திருந்தோம். என்னைத் தேடி வந்த பொன்னம்பலத்தின் மகனை இராணுவத்தினர் கலைத்துச் சுட்டார்கள். அதன் பின்னர் அவனைத் தேடி வந்த மூத்த சகோதரன் தம்பி இறந்து இருப்பதைப் பார்த்து அழுதுகொண்டிருந்த சமயம் அவரையும் சுட்டுவிட்டு வல்லிபுரத்தின் மகனான பேரின்பநாயகம் என்பவரையும் பழம்பாசிக் கிராமத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளையின் மகனான கைலையையும், சிவலிங்கத்தின் மகனையும் சுட்டுக் கொலை செய்தனர். ஈசன் என்பவருக்கு கையில் வெட்டுக்காயம் பட்ட நிலையில் உயிர் தப்பி வந்தார். இப்படியாக இரண்டு நாட்களாக பாரிய அட்டூழியங்கள் செய்தார்கள். கிட்டத்தட்ட பதின்நான்கிற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொலை செய்திருந்தார்கள். இப்படியாக இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தவண்ணமிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளை நடத்தி இப்பிரதேச வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி அப்பிரதேசத்தை ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக்குவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஏனென்றால் சிலோன் தியேட்டர் மற்றும் அங்கு காணப்பட்ட டொலர்பாம், கென் பாம் போன்ற பண்ணைகளிலும் தமிழர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு 1984ம் ஆண்டு காலப்பகுதியில் இவ்விடங்களை விட்டு வெளியேற வேண்டுமென்ற நேரடியான இராணுவ அச்சுறுத்தல் இருந்தது. அதாவது 1984ம் ஆண்டு ஆறாம் மாதமளவில் நேரடியாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் இதனைத் தெரிவித்து தமிழரை வெளியேற வைத்த சம்பவம் இடம்பெற்றது. அதன்பின்னர் தென்னிலங்கையின் சிறைகளிலிருந்த ஆயுட் கைதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி புனர்வாழ்வு என்ற பெயரில் இங்கு குடியேற்றி அவர்களையே இராணுவக் காடையர்களாகவும் பயன்படுத்தி வந்தனர். இவர்களது கொலைக் கொள்ளைச் சம்பவங்கள் 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் வரை நீண்டு சென்றது
தோமஸ் சவுந்தரநாயகம் -அருட்தந்தை யாழ்.மாவட்ட குரு முதல்வர் –
யேசுவில் அன்புமிக்க சகோதரர்களே பத்து வருடங்களுக்கு முன் இந்த இராயப்பர் ஆலயத்திலே அடைக்கலம் தேடி மக்கள் வந்தார்கள். அந்த நேரத்திலே திடீரென்று வானத்திற்தோன்றிய ஆகாய விமானங்கள் குண்டுவீச்சினை மேற்கொண்டன. அதனால் வந்த மக்களையும் இந்த ஆலயத்தையும் அவர்களது உடைமைகளையும் சின்னாபின்னமாக்கின. அந்தக் கோரநிகழ்வு இந்த ஆலயத்திலே நடைபெற்றது. போர்க் காலங்களிலே எவ்விதமாக மக்கள், போராளிகள், இராணுவத்தினர் நடந்துகொள்ளவேண்டுமென்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அது ஜெனிவாவிலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது மக்கள் கூடும் பொது இடங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்களென பொதுவான கட்டடங்கள் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்வது தவிர்க்கப்படவேண்டும் என்பதாகும். பொதுவாக இராணுவத்தினர் இதை அனுசரிக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இலங்கைத் தீவில் போர் நிகழும் போது இவற்றைப் பற்றியெல்லாம் இராணுவம் அக்கறைப்பட்டதாக இல்லை. எத்தனை ஆலயங்கள் மீது சிறிலங்கா இராணுவம் குண்டுகளை வீசிச் சுக்குநூறாக இடித்தது மட்டுமல்லாது, அதில் தஞ்சங்கோரி வந்த மக்களும் மரிக்கவேண்டியேற்பட்டது. அவ்விதமாகத்தான் பத்து வருடங்களுக்கு முன்பு இந்த இராயப்பர் பேராலயத்திலே நடந்த அந்தக் கோரச் சம்பவத்தை நினைவு கூர்ந்து இறந்து போனவர்களுக்காக இறைவனிடம் மன்றாட நாம் அனைவரும் வந்திருக்கின்றோம். இறைவன் இவர்களுக்கு இன்பமும் சாந்தியும் வழங்கவேண்டுமென்று மன்றாட வந்திருக்கின்றோம். பத்து வருடங்களுக்கு முன்பு உயிருடன் இருந்தவர்கள் இன்று இல்லை. இவர்களுடைய நினைவுகளை மீட்கத்தான் இங்கு வந்திருக்கின்றோம். அவர்களும் நம்மைப்போல் இந்தப் பகுதிகளில் உலாவி வாழ்ந்தவர்கள். அவர்களும் இந்தப் போர்க்காலக் கொடுமைகளையெல்லாம் அனுபவித்தவர்கள். ஆனால் இந்தச் சகோதரர்கள் எல்லாம் இந்த இடத்தில் துடிதுடிக்க மரித்திருக்கிறார்கள். இப்படியான சம்பவம் எங்கள் மத்தியில் இந்தப் போர்க்காலச் சூழலில் பல இடங்களில் நடந்திருக்கிறது. பட்டணத்தில் இருக்கின்ற புனித யாகப்பர் ஆலயத்திலே அதிகாலை வேளையிலே பொம்மர் விமானங்கள் வந்து அந்தப் பெரிய ஆலயத்தின் மேலே நான்கு குண்டுகளைப் போட்டதால் அப்போது அங்கே இறைவனைப் தொழுவதற்கு வந்திருந்த முப்பதிற்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி மரித்தது நாங்கள் அனைவரும் அறிந்ததே. இவ்விதமாக எமது யாழ்.பிரதேசங்களிலே வடக்கிலும் கிழக்கிலும் இந்தப் போரினாலே எத்தனையோ மக்கள் அகால மரணமுற்றிருக்கிறார்கள். துடிக்கப் பதைக்க இறந்திருக்கிறார்கள். இவர்களை இழந்து பரிதவிப்பவர்கள். எத்தனையோபேர் இந்தத் தாய்மார்களுக்கு எவ்விதமாக ஆறுதல் சொல்வோம். கணவனை இழந்த மனைவியர்க்கு எவ்விதமாக ஆறுதல் சொல்வோம். பிள்ளைகளை இழந்த, சகோதரர்களை இழந்த அந்தக் குடும்பங்களிற்கு எவ்விதமாக ஆறுதல் சொல்லலாம். எம்மால் ஆறுதல் சொல்லவே முடியாது. எல்லாம் வல்லவராக இறைவன்,அனைத்தும் வாய்ந்தவராகிய கடவுள் அவர்களிடந்தான் நாங்கள் மன்றாடப் போகிறோம். எங்களுடைய சோகத்தையும் எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய கண்ணீர்க் கம்பல்களையும் ஆண்டவர் துடைப்பாராக. இவ்விதமாக எங்கள் மத்தியில் நடக்கக்கூடாது. இப்படியான பேராபத்துக்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எங்கள் மத்தியில் இவ்விதமான அசம்பாவிதங்கள் எங்கள் மண்ணில் நடக்கக்கூடாது. நூற்றுப்பதினாறு பேரின் உயிர்களைப் பறிகொடுத்தவர்களாக வந்திருக்கின்ற இந்த வேளையில் எல்லாம் வல்லவராகிய இறைவன் எங்களுடைய கண்ணீரைத் துடைக்கும் படியாக மன்றாடுகின்றேன். உயிருடன் இருக்கும் எங்களுக்குப் பாதுகாப்பாளனாகவும், சரீரத்தின் கோட்டையாகவும் இருக்கும்படியாக மன்றாடி இறந்த நூற்றுப்பதினாறு உயிர்களையும் இழந்த உறவினர்களுக்காகவும் நாங்கள் மன்றாடுவோம். அவர்களுக்கு எங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, இறைவனைப் பிரார்த்திப்போமாக.
வவுனியாப் படுகொலைகள் தொடர்பாக சின்னத்தம்பி வெங்கடாசலம்
நான் நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக வவுனியாவில் வசித்து வருகின்றேன். ஆரம்ப காலத்தில் அறுவைக்காடு ஆணி என்னுமிடத்தில் இரவல் காணியிற் தான் வாழ்ந்து வந்தோம். அந்த நேரம் கணபதிப்பிள்ளை என்னும் ஒருவரிடம்தான் பல வருடங்களாகக் கூலி வேலை செய்து சீவித்து வந்தோம். ஒரு நாள் மாமடுப்பகுதியில் இராணுவத்தினர் வெட்டிக் கொலை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு எங்கள் ஊரைச் சேர்ந்த அனைவரும் சில நாட்கள் காடுகளிற் பதுங்கியிருந்துவிட்டுத் திரும்ப வந்து கணபதிப்பிள்ளையின் தம்பியாரான பேரம்பலம் என்பவரின் காணியில் இருந்தோம். அவ்வாறு வசித்து வரும்வேளை 1977ம் ஆண்டு ஒரு நாள் அதிகாலை மகாறம்பைக்குளத்தில் குண்டு வெடித்ததில் சிங்கள இனத்தவர்கள் தமிழர்களைத் தாக்கினார்கள். இதனால் இரண்டு மூன்று நாட்களாகக் கஸ்ரப்பட்டு பற்றைக் காடுகளுக்குள் ஒளிந்திருந்தோம். அந்த நேரந்தான் பல தமிழர்களுடைய கடைகளை எரித்தார்கள். இதனால் நாங்கள் பொருட்கள் வாங்கமுடியாது பட்டினி இருக்கவேண்டிய நிலை வந்தது. அதன் பின்னர் மாமடுவில் சண்முகம் தோட்டத்தில் எட்டு வருடங்களாக இருந்தோம். அந்த நேரம் வயலும் தோட்டமும் செய்து வந்தோம். சிங்களவர்கள் அனைவருடனும் ஒற்றுமையாகத் தான் இருந்தோம். திடீரென ஏதோ ஒரு பிரச்சனை என்றவுடன், தமிழர்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டுப் போய்விடவேண்டும் இல்லாவிட்டால் வீடுகள் அனைத்தையும் எரித்துவிடுவோமெனப் பயமுறுத்தினார்கள். உடனே நாங்களும் எங்களுடன் ஏழு குடும்பங்களும் ஒன்றாக உயிருக்குப் பயந்து அவ்விடத்தை விட்டு எந்தவிதப் பொருட்களையும் எடுக்காது அப்படியே விட்டுவிட்டு இடம்பெயர்ந்து பூந்தோட்டப் பகுதியில் ஒரு காணியில் கூலி வேலை செய்து அங்கேயே வசித்து வந்தோம். அந்த நேரம் 1984ம் ஆண்டு பத்தாம்; மாதம் அளவில் பாற்சபையில் ஒரு குண்டு வெடித்தது என்றும் இரண்டு காவற்றுறையினர் இறந்தார்கள் என்றும் கதைத்தார்கள். அன்றைய தினம் காலை பூந்தோட்டம் சந்தியில் இருக்கின்ற ஒரு கடைக்குப் பொருட்கள் வாங்குவதற்காகப் போயிருந்தேன். அந்த நேரம் அந்தக் கடையில் வேலை செய்த நாதன் என்பவர் காவற்றுறையினர் சுட்டுக் கொண்டு வருகிறார்கள். இவ்விடத்தில் நிற்காமல் எல்லோரும் ஓடுங்கோ என்று சொல்லிக்கொண்டு வந்ததால் அவ்விடத்தில் நின்ற மக்கள் அனைவரும் ஓடிவிட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே கடைக்குள்ளிருந்த கட்டிலுக்குக் கீழ் படுத்திருந்தோம். சரமாரியாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவ்வேளை தமிழன் தமிழன் என்று சிங்களத்தால் கத்தும் சத்தம் கேட்டது. எங்களுக்கு ஒரே பயமாக இருந்தது. அதேவேளை என்னுடைய வீட்டுப் பக்கம் எவ்வாறு பிரச்சனை இருக்கிறதென்றும், இன்னொரு காணியில் வேலை செய்துகொண்டிருந்த மகன் குறித்து வீட்டின் மிகுதிப் பேர் அனைவரும் என்ன ஆனார்கள் என்றும் தெரியாத நிலையில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு மணித்தியாலத்தின் பின் நிலைமை ஓரளவு சுமுகமாகி விட்டது. காவற்றுறையினர் அனைவரும் போனபின் நான் வீடு செல்லும் வழியில்; சோமாவதி கடைக்கு முன்னால் ஒருவரும் சந்தியில் இருவரும் கொல்லப்பட்டுக் கிடந்ததை என் கண்ணாற் காணமுடிந்தது. அன்றைய தினத்தில் மாத்திரம் ஒன்பது பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் ஒரு மாதிரி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அதன் பின்னர் இரண்டு நாட்கள் பயத்தின் காரணமாக வீட்டிற்குள்ளேயே இருந்தோம். இப்படியாகக் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம் தொழிலேதும் செய்ய முடியாத நிலையில் மண்ணெண்ணை,
பெற்றோல் வாங்கி சின்னக் கடை ஒன்று போட்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தேன். 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரச்சனைகள் இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அடிக்கடி இராணுவம் வருவரும் யாராவது விடுதலைப் புலிகள் வந்தார்களா என விசாரிப்பதும் பின்னர் சோதனை செய்வதுமாக இருந்தது. அத்துடன் திடீர் திடீரென ஊடரடங்குச் சட்டம் போடுவதுமாக இருந்தது. இந்த நிலையில் இங்கிருந்து சீவிக்க முடியாது என்ற நிலையில் அனைத்தையும் விட்டுவிட்டு கையிற் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக காக்கையன்குளம் நோக்கிச் சென்றோம். அங்கு சிறிய கொட்டில் போட்டு விவசாயம் செய்து வந்தோம். அப்படியாகப் பதினொரு வருடம் வசித்து வரும்வேளை ஒருநாள் சிறிலங்கா இராணுவம் வந்து நீங்கள் அனைவரும் வந்து இவ்விடத்தில் இருக்கக்கூடாது இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர் வெளிக்கிடவேண்டும் இல்லாவிட்டால் சுட்டு வீட்டுக்குள் போட்டு எரித்துவிடுவோமெனப் பயமுறுத்திச் சென்றார்கள். உயிருக்குப் பயந்து சமைத்த உணவைக் கூட நாயிற்குப் போட்டுவிட்டு கையில் எடுக்கக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு திரும்ப எமது பழைய இடத்திற்கே வந்துவிட்டோம். இந்நிலையில் விதைத்த வெள்ளாமை தொடக்கம் வீடுகட்டுவதற்கென சேர்த்து வைத்திருந்த பொருட்கள் வரை எடுக்கமுடியாத நிலையில் விட்டு விட்டு வந்தோம். இப்படியாக இடம்மாறி இடம்மாறி அலைந்ததால் கூலி வேலை செய்து கஸ்ரப்பட்டு உழைத்த அனைத்தும் வீணாகப் போய்விட்டது. தற்போது நாங்கள் இருக்கும் காணிகூட பணம் கொடுத்து வாங்கமுடியாத நிலையில் தவணை முறையில் கூலி வேலை செய்து பணம் தருவதாக கூறி விவசாயம் செய்து வருகிறோம். எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் இவ்விடத்திலிருந்து தொடர்ந்து கஸ்ரப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்