மடுத்தேவாலயப் படுகொலை 20.11.1999


இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், புனித யாத்திரைத் தலமாகவும் மடுத்தேவாலயம் விளங்குகின்றது. மன்னார் மாவட்டத்தில் மடுப்பிரதேச செயலர்பிரிவில் இத்தேவாலயம் அமைந்துள்ளது. இலங்கையின

அனைத்துப் பகுதியிலிருந்தும் இனமத வேறுபாடின்றி மக்கள் வந்து தரிசிக்கின்ற ஒரு புனிதத் தலமாக மடுத்தேவாலயம் விளங்குகின்றது. 1990ஆம்; ஆண்டைத் தொடர்ந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடம் எனக் கருதி மடுமாதா திருப்பதியில் தஞ்சம் புகுந்தனர். 1999ஆம்; ஆண்டு நவம்பர் மாதம் இருபதாம் திகதி பாலம்பிட்டி சின்னப்பண்டிவிரிச்சான் காட்டுப் பகுதியூடாக மடுநோக்கி முன்னேறிவந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறு முன்னேறினார்கள்; இதனால் பாலம்பிட்டி, தட்சணாமருதமடு மக்களும் இடம்பெயர்ந்து மடுப் பிரதேசத்திற் தங்கியிருந்தார்கள். பாலம்பிட்டிப் பிரதேச மக்களை இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி மடுத் தேவாலயத்திற் தங்கவைத்தார்கள்.

பெரியபண்டிவிரிச்சானிற்; தங்கியிருந்த படையினர் இரவு 9.45 மணியளவில் டாங்கிகளிலிருந்து எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். முதல் இரண்டு எறிகணைகளும் மடுத் தேவாலயத்திற்கு முன்னிருந்த ஆலமரத்தில் பட்டுச் சிதறியது. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மூன்றாவது எறிகணை மடுத்தேவாலயத்தின் இருதய ஆண்டவர் ஆலயத்தின் மீது வீழ்ந்து வெடித்தது. அப்போது அந்த ஆலயத்தினுள்ளிருந்த குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள், முதியவரென முப்பத்தொரு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்கள். அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மக்களில் ஒன்பது பேர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள். இறந்தவர்களில் இருபத்தேழு பேரின் உடல்களைத் தேவாலய ஆயர் வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று விசாரணையின் பின் மீண்டும் மடுத்தேவாலயத்திற்கு எடுத்துவந்து மடு சேமக்காலையில் அடக்கம் செய்தார். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்த மண்டபம் இன்றும் அப்படியே உள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த தெய்வசேகரம் அமரசிங்கம் இப்படுகொலை பற்றி கூறுகையில்:

“அன்றைய தினம் 6.30 மணிக்குப் பின்னர் அப்பகுதியெங்கும் சரமாரியான துப்பாக்கிச் சத்தமும் எறிகணைவீச்சுச் சத்தமும் கேட்டவண்ணமிருந்தது. மக்களனைவரும் ஆலயத்தில் உறங்கிக்கொண்டிருந்த வேளை சரியாக இரவு 9.15 மணியிருக்கும் முதலாவது எறிகணை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் விழுந்து வெடித்தது. அடுத்த எறிகணை ஆலயத்தின் முன் நின்ற ஆலமரத்தில் விழுந்து வெடித்தது. அதன்பின்னர் கடைசியாக ஏவப்பட்ட எறிகணை நான் இருந்த இடத்திற்கு மேலிருந்த இரும்புக் கம்பியில் வீழ்ந்து வெடித்தது. இதன்போது என்னைச் சுற்றியிருந்த எனது அம்மாவான சந்திரசேகரம் பூமணி, அக்காவான அம்பிகாவதி, இவரின் மூத்தமகனான கஜானன் மற்றும் பெரியப்பாவின் மகன்-மனைவி மற்றும் மகள்-கணவர் உட்பட பல உறவினர்கள் இறந்திருந்தார்கள். இதன்போது நாற்பத்தைந்து பேர்வரை இறந்தும் எழுபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் வரை காயமடைந்தும் இருந்தார்கள். இவ்எறிகணைத் தாக்குதலின் பின்னர் வேறெந்த வெடிச்சத்தமும் இல்லாமல் ஒரே அமைதியாகக் காணப்பட்டது. எங்கள் மேல் வீசப்பட்ட எறிகணைகள் அனைத்தும் தேவாலயத்திற்கு முன்னாலிருந்த மடு அரச செயலகத்திலிருந்த இராணுவத்தினர் ஏவியதை நான் உட்பட பல மக்கள்; கண்டோம். இதிலிருந்து இது ஒரு வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகவே கருதவேண்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் பண்டிவிரிச்சானிலிருந்த ஒரு மதுபானச்சாலையை உடைத்து அங்கிருந்த மதுவை அருந்திய பின்னரே இச்செயலைச் செய்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் எனது அண்ணாமார் ஏனையோர்களின் உதவியுடன் இரவு 1.00 மணியளவில் என்னை இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றி வவுனியா வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அதன்பின்னர் மயக்கமுற்ற நான் இருபத்தைந்து நாட்களுக்குப் பின்னர்தான் பழையபடி எனது சுயநினைவைப் பெற்றேன்…