பாலிநகர் படுகொலை 03.11.1999


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்குப் பிரதேசசெயலர் பிரிவில் வவுனிக்குளத்தினை அண்மித்த பகுதியிற் பாலிநகர்க் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் விவசாயம் மற்றும் வியாபாரத் தொழில்களில் ஈடுபட்டுவந்தனர்.

பாலிநகரைப் பொறுத்தவரை அது 1999ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அதிகளவு மக்கள் தொகையை கொண்டிருந்தது. அம்மக்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற பல்வேறு பகுதிகளிலுமிருந்து இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வந்தவர்களாவர். பாலிநகர்ச் சந்தி இக்காலப் பகுதியில் சிறு நகரப்பண்பு கொண்டதாகவும், அதிக மக்கள் செறிவைக் கொண்டதாகவும் காணப்பட்டது. 03.11.1999 அன்று பாலிநகர் மக்கள் தமக்கு நடக்கவிருக்கும் அவலத்தை அறியாதவர்களாக தமது வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அன்று காலை பாலிநகர்ச் சந்தியில் மக்கள் தமது பல்வேறுபட்ட தேவைகளுக்காகக் கூடிநின்ற போது. காலை 11.30 மணியளவில் விமானப்படையின் “கிபிர்” விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தின. பாலிநகர்ச் சந்தியில் விமானம் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டது என்பதை அறிந்த மக்கள், தமது உறவினர்களைத் தேடித் தாக்குதல் நடந்த இடத்துக்கு ஓடிச்சென்று கொண்டிருந்தபோது அம்மக்கள் மீதும் “கிபிர்” விமானங்கள் மீண்டும் தாக்குதலை நடத்தின. அன்றைய விமானத் தாக்குதலில் ஆறு பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்ததுடன், எட்டுப் பேர் காயமடைந்தனர்.