புதுக்குடியிருப்பு மந்துவில் படுகொலை 15.09.1999


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு அருகில் மந்துவில் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் மந்துவில் சந்தியில் பொது நிறுவனங்கள், வியாபார நிலையங்கள், சிறிய சந்தை, கோயில், தேவாலயம் என்பன அமைந்துள்ளன. மந்துவிற் கிராம மக்கள் நாளாந்த தேவைகளிற் பெரும்பாலானவற்றை இங்கே பூர்த்திசெய்து வாழ்ந்து வந்தனர். 15.09.1999 அன்று வழமைபோல குழந்தைகள், இளையவர், முதியவரென பலதரப்பட்டவர்களும்; சந்திக்குத் தமது தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வந்திருந்தனர். காலை 10.25 மணியளவில் விமானப்படையின் இரண்டு “கிபீர்” குண்டுவீச்சு விமானங்கள் முல்லைத்தீவு வான்பரப்பினூடாக பறந்து வந்து மந்துவிற் பகுதியை பத்து நிமிடங்களாக வட்டமிட்டு மக்கள் கூடிநின்ற மந்துவில் சந்தைப் பகுதிமீது குண்டுத் தாக்குதலை நடத்தின. விமானத் தாக்குதலில் சம்பவ இடத்தில் பன்னிரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சில அவ்விடத்திலும், வீதியிலும், பற்றைக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் தூக்கி வீசப்பட்டிருந்தன. இறந்தவர்களின் உடல்கள் சிதைந்த நிலையிலிருந்தன. படுகாயமடைந்திருந்தவர்களை அப்பகுதி மக்கள் வாகனங்களில் ஏற்றி புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். இதில் பத்திற்கும் மேற்பட்டவர்கள்;; அன்று மாலையே உயிரிழந்தனர்;. இச்சம்பவத்தின் போது நாற்பதிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். வியாபார நிலையங்கள், பயன்தருமரங்கள், கால்நடைகள் போன்ற பல லட்சம் பெறுமதியான சொத்துக்களும் அழிந்தன.

எனது கணவர் காணியில் கிடைக்கும் தேங்காய்களைக் கொண்டு சென்று மந்துவில் சந்தியில் விற்றுவிட்டு வருவார். சம்பவ தினமன்றும் பத்துத் தேங்காய்களை விற்றுவிட்டு சாமான்கள் வாங்கி வரவென்று போனார். கிபிர் விமானங்கள் சந்திப் பகுதியில் குண்டுகளைப் போட்டதென்று அறிந்தவுடன், தகப்பனைத் தேடி மகன் பிறேமன் போனார். நான்; என்ன நடந்ததோ என்று தெரியாமல் பயத்துடனிருந்தேன். மகன் போன போது வேலிக்கரையில் நாடியைப் பொத்திப் பிடித்தபடி படுத்திருந்தாராம். உடனே வீதியில் வந்த மோட்டார் சைக்கிளை வாங்கி புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு ஏற்றிக்கொண்டு போகும்போது இடை நடுவிலே இறந்து விட்டார். ஏற்கனவே எனது ஆறாவது மகன், 1985 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவப் பிரச்சனைக்குப் பயந்து, வவுனியாவில் இருந்த மூத்த மகனின் வீட்டில் இருந்து பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த வேளை, 1985ம் ஆண்டு வைகாசி மாதம் இருபதாம்; திகதியன்று வவுனியா ஆச்சிக்குளம் பகுதியில் வைத்து

 

சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தற்போது பதின்நான்கு ஆண்டுகளின் பின்னர் எனது கணவரையும் சிறிலங்கா விமானப்படையினர் குண்டு வீசிக் கொன்றுள்ளனர்.”