சுண்டிக்குளம் நல்லதண்ணித் தொடுவாய் மீதான கிபீர் குண்டுவீச்சுத் தாக்குதல் 02.12.1998


கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவின் எல்லைக் கிராமமாகச் சுண்டிக்குளம் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பிரதேசத்தில் பறவைகள் சரணாலயம் காணப்படுவது சிறப்பம்சமாகும். கடலும் கடல் சார்ந்த இப்பிரதேசத்தில் மீன்பிடி பிரதான தொழிலாகும். கடற்படையினர் வடக்குக் கிழக்கில் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மீது பல்வேறு கால கட்டங்களிலும் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர். இந்தவகையில் சுண்டிக்குளக் கிராமமும் கடற்படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.

1995ஆம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்த உடுத்துறை, தாளையடி, ஆழியவளைப் பிரதேச மக்கள் தமது தொழில் நிமித்தம் சுண்டிக்குளப் பகுதியில் வந்து சிறிய குடிசைகள் அமைத்து கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் குடியேறினார்கள். இம்மக்கள் கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமது வாழ்க்கையை ஓட்டுவதற்காக கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 1998.12.02 ஆம்; திகதி நண்பகல் 12.00 மணியளவில் விமானப்படையின் இரண்டு கிபீர் விமானங்கள் இப்பகுதி வான் பரப்பினுள் பேரிரைச்சலுடன்; நுழைந்து வட்டமிடத் தொடங்கின. இதனைக்கண்ட மக்கள் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினர். சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்பகுதியை வட்டமிட்ட பின்னர் அவை நல்லதண்ணித் தொடுவாய் குடியேற்ற முகாம் மீது ஆறு குண்டுகளைப் போட்டன. இக்குண்டுவீச்சுத் தாக்குதலினால் சிறுவர்கள், பெண்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பலர் காயமடைந்தனர்