பிரமந்தனாற்றுப் படுகொலை – 02.10.1985


02.10.1985 அன்று அதிகாலை வேளை பொழுது புலர்ந்து புலராத நிலமை. அதிகாலை வானில் ஓர் உலங்குவானூர்தி முதலில் சுற்றி வட்டமிட்டு சுட்டுக்கொண்டே இருந்தது.  அதனைத் தொடர்ந்து மூன்று குண்டுவீச்சு விமானங்கள் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. அவை குண்டுகளை வீசவில்லை. இவை மூன்றும் இத்தாலியத் தயாரிப்பான சிறியரக சியாமா செட்டி விமானங்களாகும்.

இந்த வேளையிற் பிரமந்தனாற்றுக் கிராமத்தின் தெற்கு எல்லை ஓரமாகவுள்ள காட்டுப்பகுதிக்குள் இராணுவ அணிகள் உலங்குவானூர்த்தி மூலமாக தரையிறக்கப்பட்டன. தரையிறக்கப்பட்ட படைகள் படிப்படியாக முன்னேறி கிராமத்தினைச் சுற்றிவளைத்து கொண்டன. வீட்டுக்கு வெளியே வந்து என்ன நடைபெறுகின்றது எனப் பார்த்துக்கொண்டு நின்ற பொதுமக்களுக்கு அந்த ஊரைச் சேர்ந்த மயிலர் கந்தசாமி என்பவர் ஒழுங்கைகளுக்கூடாக காட்டுக்குள்ளால் ஆமி வருகிறான் என்று சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டே ஓடிவந்தார். அவர் கூறுவதைக்கேட்டு அக்கிராம மக்கள் விழிப்படைந்தார்கள்.

அந்தச் சம்பவத்தினை நேரில் பார்த்த திருமதி உமாமகேஸ்வரன் கமலாம்பிகை (வயது 45) அன்றையதினம் நடந்த அனர்த்தம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

காட்டுக்குள்ளால ஆமி நடந்து வருகிறான் என்று மயிலர் கந்தசாமி சொல்லக் கேட்டவுடனேயே நான் எனது ஆறு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டேன். எனது கடைசிக் குழந்தை தீபன் அப்போது ஆறுமாதக் குழந்தை. அன்றைய தினம் நாள் முழுவதும் எனது பிள்ளைகள் பசியோடும் பட்டினியோடும்தான் இருந்தார்கள். எந்த உணவும் கிடைக்கவில்லை. முழுநாளும் பட்டினிதான். தாகம் எடுத்தபோது குளம் குட்டைகளில் தங்கி நின்ற தண்ணீரைத்தான் எடுத்துக் குடித்தோம்.

மேற்படி தினத்தன்று இக்கிராமத்திலிருந்த சிவபாதம் என்பவருடைய கடை கொள்ளையடிக்கப்பட்டது. அந்தக் கடையிலிருந்த நகை, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேற்குறித்த சிவபாதத்தின் கடையைக் கொள்ளையடித்த சிறிலங்கா இராணுவத்தினர் அவருக்குப் புலியென சாயம் பூசிக் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு போனார்கள். போகும் போது ஓலை வீடுகளுக்குத் தீவைத்துவிட்டுச் சென்றார்கள். பல வீடுகள், பொதுமக்களுடைய உடைமைகள், பாடசாலைப் பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டன. அன்றையதினம் ஜந்து உலங்குவானூர்திகள் மூலம் தரையிறக்கப்பட்ட சிங்களச் சிப்பாய்கள் செய்த அடாவடித்தனங்களால் இக் கிராமத்தினைச் சேர்ந்த பலர் புகலிடம் ஏதுமற்ற ஏதிலிகளாக்கப்பட்டனர்.

இப்படுகொலை பற்றிய மேலும் சில விபரங்கள்

மேற்படி இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையின் போது பதினான்கு அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் சுட்டும் வெட்டியும் படுகாயப்படுத்தப்பட்டார்கள். பல அப்பாவிப் பொதுமக்கள் ஏறக்குறைய இருபத்திரண்டிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிட்டிணர் சிவபாதசுந்தரம் என்பவரினது கடையில் நீண்ட நைலோன் கயிற்றால் கைகள் பின்பக்கமாகப் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்வதற்கு ஆயதத் நிலையில் வைக்கப்பட்டிருந்தார். இவர்களை நைலோன் கயிற்றினால் கட்டிவைத்த சிங்களப் படைகள் போதையேறிய நிலையில் காணப்பட்டார்கள். இவர்களைப் பின்னர் வந்து கவனித்துக்கொள்வதாகக் கூறிவிட்டு மனித வேட்டைக்குச் சென்று விட்டார்கள். நல்ல வேளையாக ஒரு சிறுவன் கத்தியைக் கொண்டுபோய் அவர்களது கைகள் கட்டப்பட்டிருந்த நைலோன் கயிற்றை வெட்டிவிட்டுச் சென்றமையால் அவர்கள் யாவரும் காப்பாற்றப்பட்டார்கள்.

உடன் பிறந்த தம்பியைப் பறிகொடுத்த அக்காவின் துயரம்.

மேற்படி 02.10.1985 அன்று இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் போது தனது உடன்பிறந்த சகோதரனான வாரித்தம்பி பாக்கியநாதன் என்பவரைப் பேரினவாதக் கொடுமைகளுக்குப் பறிகொடுத்த அவரது சகோதரியான திருமதி துரைராசா சாரதாதேவி (வயது 45) என்பவர் இப்படுகொலைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.

சம்பவதினம் காலை வேளை தரையிறக்கப்பட்ட சிறிலங்காப் படையினர் எனது வீட்டைச் சுற்றிவளைத்தார்கள். எனது கணவர் அப்போது அங்கே இருக்கவில்லை. எனது தம்பியார் தான் அங்கே இருந்தார். அவருக்கு அப்போது இருபத்தொரு வயதுதான் இருக்கும். எமது வீட்டைச் சுற்றிவளைத்த சிங்கள இராணுவத்தினர் முதலில் எங்கள் எல்லோரையும் முட்டுக்காலில் நிற்கும்படி பணித்தார்கள். அவ்வாறே நாங்கள் நின்றோம். எங்கள் வீட்டுக்குள் தாங்கள் தேடுதல் மேற்கொள்ளப்போகின்றோம் என்றார்கள். அவ்வாறு சொல்லியவாறே எங்கள் வீட்டுக்குள் அடாவடித்தனமாக நுழைந்தார்கள்.

எனது தம்பியின் இரு கைகளையும் பின்னால் பிணைத்துக் கட்டினார்கள். வீட்டுக்குள் வந்தவர்களிற் சிலர் நன்றாகத் தமிழிற் கதைத்தார்கள். இவர்களுள் ஒரு வெள்ளைத் தோலுடைய நன்கு உயரமான தோற்றமுடைய ஒருவரும் காணப்பட்டார். அவர் ஒன்றுமே பேசவில்லை. எல்லாவற்றையும் கூர்மையாக அவதானித்தபடி இருந்தார். அன்றையதினம் அவரை வேறு பல தமிழ் மக்களும் கண்டிருக்கிறார்கள். அவரைப் பொதுமக்கள் மொசாட் என்று அழைத்தார்கள். மொசாட் என்றால் என்னவென்று எனக்கு முதலில் விளங்கவில்லை. பின்னர்தான் மொசாட் என்பவர்கள் வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள் என்று தெரிந்துகொண்டேன்.

சிறிலங்காப் படையினர் செய்த கொடுமைகள் மேற்குறித்த திருமதி துரைராசா சாரதாதேவி (வயது 45) தொடர்ந்து கூறுகையில்,

மேலும் சிறிலங்கா இராணுவத்தினர் எனது தம்பியிடம் துவக்கைக் கொடுத்துப் படமெடுத்தார்கள். வேறு சில சிறிலங்கா இராணுவத்தினர் உலங்குவானூர்திக்கு முன்னால் எனது தம்பியை நிறுத்தி வீடியோப் படம் எடுத்தார்கள். எனது தம்பிக்குக் காலால் உதைத்தார்கள், அடித்தார்கள். எனது தம்பிக்கு அடிக்கவேண்டாம் என்று நான் கதறி அழுதேன். அவரை எல்.ரி.ரி.இ என்று சொல்லி அடித்தார்கள். நான் இல்லை அவருக்கும் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லி அழுதேன். அவர்கள் என்னிடம் எனது தம்பியை எல்.ரி.ரி.இ என்று சொன்னால் விட்டு விடுவதாகச் சொன்னார்கள். நான் அவர்களிடம் இல்லாத ஒன்றைச் சொல்லமாட்டேன் என்றேன். அவர்கள் எனது தம்பியை உதைத்துக் கொண்டும், அடித்த படியும் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் பின்னால் அழுதுகொண்டு போனேன். சிறிலங்காப் படையினர் என்னை வழிமறித்து அடித்து உதைத்துத் தள்ளி விழுத்திவிட்டார்ககள். என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இந்தவேளை எனது கணவர் எனது வீட்டில் இருக்கவில்லை. அவர் புளியம்பொக்கணைக்குச் சென்றுவிட்டார். சிங்கள இராணுவத்தினர் எனது வீட்டைத் தீமூட்டி எரித்தார்கள். இவற்றைக் கேள்விப்பட்ட கணவர் ஊருக்கு வந்தார்.

அக்கால கட்டத்தில் முல்லைத்தீவு நகரில் முகாமமைத்திருந்த சிங்கள இராணுவச் சிப்பாய்கள் தான் எங்கள் வீட்டைக் கொளுத்தினார்கள் என்பதைக் கேள்விப்பட்டதோடு, எனது தம்பியையும் அவர்கள் இழுத்துச் சென்றமையால் அங்கு போய் எனது தம்பியைப் பற்றி விசாரித்தேன். அதற்கு அவர்கள் தாம் எங்களுடைய ஊருக்கு வரவில்லை என்றும் இதுபற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்றும் மறுத்து விட்டார்கள்.

இதன் பின்னர் நான் சிறிலங்காச் சிப்பாய்கள் எனது தம்பியைக் கொன்றிருப்பார்கள் என்று எண்ணிக் காட்டுப் பக்கங்களில் அவரைத் தேடினேன். இச்சம்பவம் இடம்பெற்று ஆறாம் நாள் தான் எனது தம்பியின் இறந்த உடலைக் காட்டுப்பக்கம் கண்டேன். அவரது உடலில் பலத்த கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டன. கைகள் பின்னுக்குக் கட்டப்பட்டிருந்தன. இறந்த அவரது உடல் நன்றாகப் பழுதாகிப் போயிருந்தது. அதனால் அதனை அந்த இடத்திலேயே எரித்துவிட்டோம். எனது தம்பியைப் பலவந்தமாக உலங்குவானூர்தியில் ஏற்றிய சிங்களச் சிப்பாய்கள் உலங்குவானூர்தி மேலே எழும்பியபோது அதிலிருந்து தள்ளிவிட்டதாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். இப்போது நான் கூலிவேலை செய்து எனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றேன்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு பெண்ணின் சாட்சியம் “இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பிரமந்தனாற்றுக் கிராமத்தில் வாழ்ந்த திருமதி குலஅரியேஸ்வரி (வயது 46) இப்படுகொலைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.

“இப்படுகொலைத் தினத்தன்று ஐந்து உலங்குவானூர்திகள் வானத்தில் வட்டமிட்டதைப் பார்த்தேன். விமானங்களும் வானத்தில் சுற்றிச் சுழன்றடித்து வட்டமிட்டுக்கொண்டன. சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் உலங்குவானூர்தி மூலம் தரையிறக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். நாங்கள் எல்லோருமாகக் காட்டுக்குள் ஓடிவிட்டோம். காட்டுக்குள் தரையிறக்கப்பட்ட இராணுவம் வீடுகளை எரித்துக் கொண்டே வந்தது. தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவையைச் சேர்ந்த டிஸ்கோ என்பவர் முகத்தில் பெயின்ரைப் பூசிக்கொண்டு உருமறைப்புச் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு இராணுவத்திற்கு வழிகாட்டிக்கொண்டு சென்றதைக் கண்டேன். டிஸ்கோவால் காட்டிக்கொடுக்கப்பட்டு தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையைச் சேர்ந்த செல்வநாயகம் என்பவர் பிடிபட்டார். ஆனால் அவர் தந்திரோபாயமாக தப்பிக்கொண்டார். அவர் இராணுவப் பயிற்சி பெற்றிருந்த ஒருவரென்பதை நான் அறிவேன். எனது வீட்டுக்கு அருகில் சிறிலங்காச் சிப்பாய்கள் அப்பன் என்பரையும், ஆனந்தராசா என்பவரையும் வாழை மரத்தோடு கட்டிவைத்து அவர்களது நெற்றியில் சுட்டுப் படுகொலை செய்தார்கள்”

மேலே கூறப்பட்ட 02.10.1985 அன்று பிரமந்தனாற்றுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் சிறிலங்கா விமானப் படையினரும் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் இருபதிற்கும் முப்பத்தைந்து வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர்.

மேலதிகத் தகவல்கள் பிரித்தானிய கே.எம்.எஸ் (கினிமினி இராணுவப் பிரிவைச் சேர்ந்த Tim Smith என்பவர் சிறிலங்கா இராணுவத்திற்கு சிறிலங்காவில் தங்கியிருந்து  கே.எம்.எஸ்  (கினிமினி சேவிஸ்) இராணுவ பிரிவின் சார்பாக பயிற்சி கொடுத்தார். பயிற்சி கொடுத்ததோடு, அவர்களோடு இணைந்து பல சந்தர்ப்பங்களில் விமானத் தாக்குதல்களுக்கு விமானியாகவும் Tim Smith கடமையாற்றியுள்ளார்.

இலங்கையில் கடமையாற்றிய பின் தனது சொந்த நாடான பிரித்தானியாவுக்குச் சென்ற இவர் சிறிலங்காவில் தனது பணிகள் பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார். “The Reluctant Meunary” (The Recollection of a British Ex Army Helicopter Pilot in the anti Terrorist War in Sri Lanka) என்ற அந்த நூலில் அறுபத்தோராம் பக்கத்தில் புதுக்குடியிருப்பு புறச்சூழலில் (பிரமந்தனாறு) சிறிலங்காப் படைகளைத் தான் தரையிறக்கும் போது தனது அனுபவத்தினை எழுதியுள்ளார். இலங்கையின் தரைப்படையும், விமானப்படையும் கூட்டாகத் தரையிறக்கப்பட்ட படை நடவடிக்கைக்கு Flight Lieutant (முதலாவது லெப் றொகான் குணதிலகா தலைமை தாங்கியதாகவும், அவர் எவ்வேளையிலும் எத்தகைய முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறியதாகவும் (He is always undecided) குறிப்பிட்டுள்ளார். மேலும் இநத் நூலில் சிறிலங்கா படைகளைப் பற்றி விபரிக்கும்போது “சிறிலங்கா இராணுவம் ஒழுக்கம் கெட்ட இராணுவமாகவே இருந்தது என்றும் இவர்களைக் களத்தில் இறக்கிவிட்டால் அவர்கள் கொலைவெறி போல (Killing Machinery) செயல்படுவர் என்றும் கூறியுள்ளார்.

றொகான் குணத்திலக.

சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி ஏயா மார்சல் ரி.குணதிலகாவின் மகன் தான் இந்த றொகான் குணதிலக (Flight Lieutant) ஆவார். இவர் தனது தந்தையாரின் செல்வாக்கால் விமானப் படையினுள் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில் ஒரு இடைநிலை அதிகாரியானார். இவரே பிரமந்தனாற்றுப் படுகொலைக்குப் பொறுப்பாக அன்றைய தினம் இருந்தார்.

02.10.1985 அன்று பிரமந்தனாற்றுப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. ஸ்ரீபன்ராஜாஸ் சத்தியசீலன் (வயது 26 – கமம்)
  2. நாகப்பன் சத்தியலிங்கம் விவசாயி      21
  3. கந்தசாமி தர்மசிங்கம் (வயது 23 – கமம்)
  4. கிட்டிணர் சிவபாதசுந்தரம் (வயது 33 – கமம்)
  5. கறுப்பையா தர்மலிங்கம் (வயது 23 – கமம்)
  6. கறுப்பையா செல்வராசா (வயது 24 – கமம்)
  7. பொன்னுத்துரை பாக்கியநாதன் (வயது 21 – கமம்)
  8. சுப்பையா அருணாச்சலம் (வயது 29 – தொழிலாளி)
  9. சின்னையா சவுந்தரராசன் (வயது 24 – ஊழியர்)
  10. வன்சநாதகே பியதிலகே காமினி (வயது 26 – மீன் வியாபாரி)
  11. வல்லிபுரம் கணேசமூர்த்தி (வயது 30 – கமம்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.