வயலூர்ப் படுகொலை – 24.08.1985


1972ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவிற் பிரதேச செயலர் பிரிவில் காணி இல்லாதிருந்த ஏழை மக்களுக்கு வயலூர் பிரதேசத்தில் காணியினை வழங்கி அம்மக்களை குடியேற்றியதன் மூலம் இக்கிராமம் உருவாகியது. வயலூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்கள் விவசாயத்தையே தமது பிரதான தொழிலாக மேற்கொண்டார்கள். இக்கிராமம் எத்தகைய அபிவிருத்திகளும்  இன்றி வறிய மக்கள் வாழும் பிரதேசமாகும்.

 

1985.08.24 ஆம் திகதி அதிகாலையில் வயலூர்க் கிராமத்தினைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் வீடுகளில் இருந்த பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்களைக் கைதுசெய்து தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். தமது கணவன்மாரை இராணுவத்தினர் கைதுசெய்து கொண்டு செல்ல அவர்களின் பின்னால் மனைவிமாரும் பிள்ளைகளும் சென்றார்கள். குமரன்குளம் நோக்கி காட்டுப் பாதையூடாக கைதுசெய்து கொண்டு செல்லப்பட்ட ஆண்களின் பின்னால் சென்ற பெண்களை சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் போகுமாறு இராணுவத்தினர் பயமுறுத்தியதுடன், ஆண்கள் தங்களுக்கு பாதை காட்டிவிட்டுத் திரும்பி வருவார்கள் எனவும் கூறினார்கள்.

 

ஐம்பது பேர் வரையான ஆண்கள் இராணுவத்தினராற் குமரன்குளம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவர்களில் ஒரு சிலரே தப்பி மீண்டும் வயலூர்க் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இராணுவத்தினரால் கூட்டிச் செல்லப்பட்டவர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட உடல்கள் குமரன்குளம் பகுதி முழுவதும் காணப்பட்டன. காயத்துடன் தப்பிய இருவரில் ஒருவருக்கு வாயினுள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வயலூர்க் கிராமத்து மக்கள் உடுத்த உடுப்புடன் இடம் பெயர்ந்து வேறு ஊர்களுக்குச் செல்ல வயலூர்க் கிராமம் மக்களற்ற சூனியப் பிரதேசமாக மாறியது.

 

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.