திம்பு பேச்சுவார்த்தை கால படுகொலை
1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் பத்தாம் திகதி பூட்டான் நாட்டுத் தலைநகரமான திம்புவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இம் மாதம் வன்முறைகள் நிரம்பிய மாதமாக இருந்தது. இதே மாதம் பதின்நான்காம் திகதி திருமலை மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்ய மடுத் தமிழ்ப் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கிப் படுகொலை செய்யப்பட்டனர். இதே காலகட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் பாரிய படுகொலைச் சம்பவம் ஒன்று நடந்தேறியது. இதே மாதம் பதினேழாம் திகதி டெய்லி நியூஸ் நாளேட்டில் பயங்கரவாதிகள் படைத்தரப்பினை வவுனியாவில் சீண்டுகின்றனரென தலைப்பிட்டுச் செய்தியொன்றினை வெளியிட்டன. இச் செய்தியில் நகரத்திலிருந்து முன்நூறு
யார் தூரத்தில் கண்ணிவெடியொன்று வெடித்ததாகவும், இராணுவ வண்டி அதிலிருந்து தப்பியதாகவும் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தொரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், செய்தி இருந்தது. இவர்களில் பலர் பயங்கரவாதிகள் என்று அரச தரப்பு சொன்னபோதும் இதை எவரும் நம்பவில்லை. இருநூறு-முன்நூறு வரை தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக (பிள்ளைகள் பெண்கள் உட்பட) தமிழர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திம்புவில் பேச்சுவார்;த்தை நடத்திய தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். 18.08.1985 செய்தி ஏடுகளில் வவுனியா மருத்துவமனையின் பொறுப்பதிகாரி இருபத்தொரு இறந்தோரின் உடல்களைப் பரிசோதனை செய்யததாக கூறியிருந்தார். சற்றடே றிவ்யூ ஏட்டில் இரண்டு நேரில் பார்த்த சாட்சிகளின் தகவலின்படி இப்படுகொலை நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது