குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985
யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கடல் கடந்து படகுகளில் யாழ் நகருக்கு வரவேண்டியதால் அவர்கள் நாளாந்தம் தமது தேவைகளை நிறைவேற்றப் படகுகளில் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்தது. நெடுந்தீவு மக்களின் கடற் போக்குவரத்திற்கு குமுதினிப்படகுச் சேவையே பெரிதும் உதவியது. இப்படகுச் சேவை நாளாந்தம் காலை 7.00 மணிக்கு நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து குறிகட்டுவானுக்கும் பின்னர் மாலை 5.00 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுத் துறைமுகத்துக்கும் பயணிக்கும்.
1985ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி குமுதினிப் படகு வழமைபோல தனது சேவையை ஆரம்பித்தது. அன்று ஏறக்குறைய அப்படகில் அறுபதிற்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்தார்கள். நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமயம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினரின் இரண்டு பீரங்கிகள் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் குமுதினிப் படகினை அண்மித்த போது அதில் பயணித்த மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவ்விரண்டு விசைப்படகுகளில் கடற்படையினர் தங்களுடன் கோடரி, கத்தி, அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். இதைப் பார்த்த மக்கள் செய்வதறியாது கதறி அழுதார்கள். வந்த கடற்படையினர் குமுதினிப் படகினுள் மூன்று மாதக் குழந்தை உட்பட அனைத்துப் பயணிகளையும் ஒவ்வொருவராகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து மற்றவர்கள் அறியாமல் தாங்கள் எடுத்து வந்த கூரிய ஆயதங்களினால் வெட்டிக் கொன்றனர். கடற்படையின் இத் தாக்குதலில் நாற்பத்திரண்டிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமது அங்கங்களை இழந்தார்கள். இவர்கள் அனைவரும் மாலை கரையொதுங்கிய குமுதினிப் படகிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.
சம்பவம் தொடர்பாக நெடுந்தீவைச் சேர்ந்த எஸ்.புஸப்ராணி தெரிவிக்கையில்:
“அனுராதபுரத்தில் நடைபெற்ற கொடூரச் சம்பவத்திற்குப் பதிலடியாகவே இக்குமுதினிப் படுகொலை நடைபெற்றது. இதில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் எனது உறவினர் பலர் இறந்துள்ளனர். இச்சம்பவத்தில் நான் வெட்டிக்
காயப்படுத்தப்பட்டேன். கர்ப்பிணித் தாய்மாரைத் தாக்கும்போது வயிற்றிலுள்ள குழந்தை “கொட்டியா” (LTTE) என்று கூறித் தாக்கினார்கள். பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றிப் பலர் தாக்கப்பட்டனர்.”
15.05.1985 அன்று குமுதினிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
- பசுபதி நிர்மலாதேவி (வயது 20)
- கந்தையா சதாசிவம் (வயது 56 – ஆசிரியர்)
- ஜேசுதாசன் (வயது 46 – கடற்தொழில்)
- மாரியம்மா
- ஆ. கனகலிங்கம் (வயது 34 – கடற்தொழில்)
- தில்லைநாதன் (வயது 32 – கடற்தொழில்)
- ஞானப்பிரகாசம் மரியமாணிக்கம் (வயது 45 – கடற்தொழில்)
- சடையர் கோவிந்தன் (வயது 46 – கடற்தொழில்)
- செபமாலை அந்தோனிப்பிள்ளை (வயது 45 – கடற்தொழில்)
- செபமாலை கிருஸ்ரி (வயது 24)
- நிமிலி (வயது 18)
- அனுசியா (வயது 23)
- பேர்ணாட்கிறார் பூரணம் (வயது 22)
- வெ. கந்தையா (வயது 44 – கடற்தொழில்)
- செ. சந்திரகுமார் (வயது 30 – கடற்தொழில்)
- தருமலிங்கம் பாபு (வயது 13)
- குமாரசாமி விநாயகம் (வயது 38 – கடற்தொழில்)
- சபாபதி தெய்வானை (வயது 68 – கடற்தொழில்)
- ஞானப்பிரகாசம் தேவசகாயம் (வயது 42 – கடற்தொழில்)
- வைத்திலிங்கம் சதாசிவம் (வயது 45 – கடற்தொழில்)
- இராமன் முருகன் (வயது 52 – கடற்தொழில்)
- கரையூர் சின்னையா (வயது 35 – அரச ஊழியர்)
- முத்தன் மணிவண்ணன் (வயது 13)
- றொகேசியன் சந்திரகுமார் (வயது 18 – மாணவன்)
- தொப்பை நாகேந்திரம் (வயது 23)
- சின்னவன் அந்தோனி (வயது 65)
- இராமநாதன் (வயது 16)
- வேலுப்பிள்ளை புஸ்பராசா (வயது 22)
- ஞானசேகரம் (வயது 28 – தபால் அதிபர்)
- விசுவலிங்கம் சுபாஜினி (7மாதக் குழந்தை)
- கனகம்மா (வயது 55 – கடற்தொழில்)
- பழனி மோகநாதன் (வயது 27 – கடற்தொழில்)
- தர்மலிங்கம் அமிர்தலிங்கம் (வயது 18)
- பசுபதி நிர்மலாதேவி (வயது 19 – மாணவி)
- நவசிவாயம் கந்தையா (வயது 45 – இ.போ.ச ஓட்டுநர்)
- இராமலிங்கம் பரலோகநாதன் (வயது 35 – கமம்)
- கார்த்திகேசு (வயது 45)
- க. பார்வதிப்பிள்ளை (வயது 40)
- சி.நாகேந்திரன் (வயது 32 – கடற்தொழில்)
- குசலகுமாரி (வயது 28)
- சாந்தலிங்கம் (வயது 1)
- ஞா. சரோஜாதேவி (வயது 24 – ஆசிரியர்)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.