வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா பொதுமக்களின் படுகொலை 06.01.1985.
வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா மேரி பஸ்ரியன் மற்றும் பொதுமக்களின் படுகொலை 06.01.1985.
வங்காலைக் கிராமம் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. புனித ஆனாள் தேவாலயம் இங்குள்ள மக்களின் வணக்கத்தலமாக உள்ளது.
1985ஆம் ஆண்டு தை மாதம் ஆறாம் திகதி பூரணை தினத்தன்று பி.ப. 12:30 மணியளவில் வங்காலைக் கிராமத்தினை இராணுவத்தினர் சுற்றி வளைத்துக்கொண்டனர். நள்ளிரவு தொடக்கம் மறுநாள் காலை 10.00 மணிவரை வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன.
மேரி பஸ்ரியன் குருவின் வதிவிடத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டு இராணுவத்தினர் சென்றனர். குருவானவர் தனது மேலங்கியையும் அணிந்துகொண்டு செபமாலையுடன் வெளியே வந்து கைகளை மேலுயர்த்தியவாறு ஆங்கிலத்தில் ‘பிளீஸ்’ எனக் கெஞ்சும் பொழுது அவரை நோக்கி இராணுவத்தினர் சுட்டனர் பங்குத் தந்தையுடன் நின்ற இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தார்கள். வெடிச்சத்தத்திற்கு பயந்து ஓடிய சிலரும் பலியாகினர். சிலர் கோயிலின் மேல் மாடியில் ஏறி பதுங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் பங்குத்தந்தையின் உடலை இழுத்து வந்து கன்னியர்மட வாசலிற் கிடத்திப் புகைப்படங்கள் எடுத்தனர். இவற்றைக் கோயிலின் மேல்மாடியில் ஒளித்திருந்த பொதுமக்கள் பார்த்தார்கள்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த பின்பு இராணுவத்தினர் ஒரே பாட்டும் கூத்துமாக இருந்தனர். பின்னர் இராணுவத்தினர் இறந்தவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். இதன் பின்னர் மக்கள் திரண்டு சென்று பார்த்தபோது மேரி பஸ்ரியனின் இருப்பிடம் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டது.
இறந்த மேரி பஸ்ரியனின் உடலைத் தவிர மற்ற எட்டுப் பேரின் உடல்களை மன்னார் வைத்தியசாலையில் கொடுத்துவிட்டு, மேரி பஸ்ரியனின் உடலைத் தள்ளாடி இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றுவிட்டனர். அவ்வேளையில் இந்த முகாமிலிருந்து எழும்பிய வழமைக்கு மாறான புகைமண்டலத்திலிருந்து அவரது உடல் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
இச்சம்பவத்தில் மேலும் பல இளைஞர்கள் வெடிபட்ட காயங்களுடன் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டு இரகசியமான முறையில் வைத்தியம் செய்யப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் வங்காலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
06.01.1985 அன்று வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா மேரி பஸ்ரியன் மற்றும் பொதுமக்கள் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
- மரியதல்மைடா தாசன் (வயது 26 – தொழிலாளி)
- சூசையப்பு மேன்பீரிஸ் (வயது 20 – மாணவன்)
- ஞானசேகரம் றூபன்குரூய் (வயது 24 – மீன்பீடி)
- சவிரியான் அந்தோனி (வயது 23 – மீன்பீடி)
- முனியப்பன் நீலமேகம் (வயது 28 – கடற்தொழில்)
- சந்தியா அலெக்சாண்டர் முறாவிலி (வயது 33 – கடற்தொழில்)
- வணபிதா மேரி பஸ்ரியன் (பங்குத்தந்தை)
- லூயிசம்மா பிராண்டா (வயது 60)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.