மன்னார், முருங்கன் வீதிப் படுகொலை – 04.12.1984


04.12.1984 அன்று காலை பதினோராம் கட்டைப் பகுதியில் காலை 11மணியளவில் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின்னர் இராணுவத்தினர் அனைவரும் தள்ளாடி முகாமிற்கு சென்று பின் மதியம் திரும்பவும் உயிலங்குளப் பகுதிக்கு வந்தனர். அவ்வேளை வானத்தில் உலங்குவானூர்தி ஒன்றும் சுற்றிக்கொண்டிருந்தது. அங்கு வந்து  வீதியோரமாக அமர்ந்திருந்தவர்களைப் பிடித்துச் சுட்டுப் படுகொலை செய்த இராணுவத்தினர் பதினோராம் கட்டையடிப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்த போது வவுனியாவிலிருந்து வந்த பேருந்தை மறித்து அதிலேற முற்பட்ட வேளை சிங்கள இனத்தவரான நடத்துநர் அதனை அனுமதிக்கவில்லை. அதனால் அவரைச் சுட்டுவிட்டு, பேருந்தில் வந்த நாற்பது பேரையும் துப்பாக்கியாற் சுட்டுக் கொன்றார்கள். இதன்போது ஒரு வயோதிபர் மாத்திரம் மயக்கமுற்ற நிலையில் உயிர் தப்பினார். அதைத் தொடர்ந்து திரும்ப முருங்கன் தபாற்கந்தோர் வரை தம் கண்ணிற்பட்ட அனைவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு இராணுவத்தினர் சென்றனர்.

குறிப்பாக ஒரு பாரவூர்தியில் வந்த ஓட்டுநர், நடத்துநர், மற்றும் அருகிலிருந்த வீட்டில் நின்றவர்களையும் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலைச் செயல் அன்று மாலை வரை நடந்தேறியது. அதில் இறந்தவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு தேடி ஓடிவிட்டு மீண்டும் பொருட்களை எடுப்பதற்காக திரும்ப வீடுகளுக்கு வந்தவர்களேயாவர். பின்னர் அடுத்த நாள் இராணுவத்தினர் முகாங்களுக்குச் சென்ற பின் பங்குத் தந்தையின் உதவியுடன் அனைத்துச் சடலங்களும் எடுக்கப்பட்டன. பேருந்தில் வந்தவர்கள், வயலில் வேலை செய்தவர்கள் என் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது சடலங்கள் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட முருங்கனிலிருந்து தள்ளாடி முகாம் வரை இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் சடலங்கள ; கண்டெடுக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி மன்னார் மாவட்டம் சிறிலங்கா இராணுவத்தின் கொலைவெறியால் சோக மயமாகியது. சம்பவம் நடந்து இரண்டாம் நாள் (06.12.1984) சிறிலங்கா இராணுவத்தின் அனுமதி பெற்று மன்னர் ஆயர், அரச அதிபர் போன்றேர் மக்களுடன் சேர்ந்து தொண்ணூறு உடல்களை (சில உடல்கள் எரிந்தவை) மன்னார் வைத்தியசாலைக்குக்  கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் தொகை இருநூறுக்கும் அதிகமாகும்.

வட்டக்கண்டலைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை தெரிவித்ததாவது:

“இதில் தப்பி வந்த கால் இயலாத ஒரு வயோதிபர் கூறும்போது: பேருந்தினை மறித்து அனைவரையும் இறக்கித் தன்னைப் போல ஒரு சிலரைத் தவிர ஏனையோரை வரிசையாக நிற்கவிட்டுத் தானியங்கித் துப்பாக்கியால் பல

இராணுவத்தினர் சேர்ந்து சுட்டதாகக் கூறினார். இச்சம்பவத்தில் எந்தவிதப் பாகுபாடுமில்லாது வயல்வேலை செய்துகொண்டிருந்த அனைவரையும் சுட்டனர். அவர்களது சடலங்கள் அனைத்தும் ஆடைகள் இல்லாது அடையாளங் காணமுடியாத நிலையில் மூன்று நாட்களின் பின்னர் மன்னார் மருத்துவமனையில் போடப்பட்டிருந்தது. இச்சம்பவத்தின் போது வீதியிலிருந்த கடைகள் சில பொதுமக்களின் வீடுகள் என அனைத்தும் உடைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் இருந்தன”

வட்டக்கண்டல் பாலப்பெருமாள்கட்டைச் சேர்ந்த கதிரன் சௌந்தரராஜன் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில்:

“1984ஆம் ஆண்டு பதினோராம் கட்டையில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் இருநூறிற்கும் மேற்பட்ட மக்களை வெட்டியும் வைக்கோலுக்குள் போட்டு எரித்தும் கொன்றார்கள். இச்சம்பவத்தில் எமது உறவினர்கள் நிறையப்பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். எனது சகோதரன் ஒருவரை இரத்தத்தைக் குடிக்குமாறு கூறி சித்திரவதை செய்தார்கள். நடராசா என்கின்ற எனது அண்ணன் ஒருவரைச் சுட்டுக் கொன்றார்கள். 1984ம் ஆண்டு மூன்றாம் பிட்டியில் வைத்து எனது மற்றைய அண்ணனான கந்தசாமி என்பவரை சித்திரவதை செய்து கொன்றார்கள் ”

04.12.1984 அன்று மன்னார்ப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டோர் விபரம்:

 1. சூசை நிக்கிளாஸ் (வயது 38 – தொழிலாளி)
 2. சூசை அந்தோனி (வயது 52 – விவசாயம்)
 3. சூசேப்பு இன்மனுவேல் லெம்பேட் (வயது 24 – விவசாயம்)
 4. இம்மானுவேல் சூசையப்பு லெம்பட் (வயது 24 – தொழிலாளி)
 5. இராமையா கந்தசாமி (வயது 50 – தெழிலாளி)
 6. இராசையா இரகுநாதன் (வயது 40 – கூட்டுறவு பரிசோதகர்)
 7. இராமலிங்கம் இலச்சுமணன் (வயது 50 – தொழிலாளி)
 8. யக்கோவு மனுவல் / அலஸ் (வயது 50 – விவசாயம்)
 9. க.த.இராஜரெட்ணம் ( வயது 67 – வைத்தியர்)
 10. கந்தப்பு அப்புத்துரை (வயது 64 – விவசாயம்)
 11. கப்பநெயினா நஜீமுதீன் (வயது 32 – தொழிலாளி)
 12. குப்புசாமி செல்லத்துரை (வயது 55 – கணக்குப் பரிசோதகர்)
 13. கபிரிகேல் ஜீவானந்தம் (வயது 40 – தபால் சேவகர்)
 14. கறுப்பையா அச்சுதன் ( வயது 34 – பொறியிலாளர்)
 15. கறுப்பையா பெருமாள் (வயது 60 – தொழிலாளி)
 16. பூசாரி கந்தசாமி (வயது 46 – தொழிலாளி)
 17. பிலேந்திரன் அல்யோண்ஸ் (வயது 55 – கமம்)
 18. பிறஞ்சிசவிரி சாரம் (வயது 54 – விவசாயம்)
 19. பிலிப்பு பிலேந்திரன் (வயது 56 – விவசாயம்)
 20. மயில்வாகனம் ஜெயக்குமார் (வயது 32 – விவசாயம்)
 21. மனுவல் அலஸ் (வயது 52 – விவசாயம்)
 22. முகமட் கனிபா சுல்த்தான் (வயது 36 – கொண்றைக்ரர்)
 23. முத்துச்சாமி சுப்பிரமணியம் (வயது 58 – மெக்கானிக்)
 24. மீலாசாகிபு அப்புல்மஜீது (வயது 43 – விவசாயம்)
 25. மஞ்சன் சின்னப்பன் (வயது 34 – தொழிலாளி)
 26. முருகேசு நவரெட்ணம் (வயது 54 – விவசாயம்)
 27. முருகேசு செல்லம்மா (வயது 60)
 28. அந்தேனி பிரான்சிஸ் மொறாய் (வயது 29 – தபால் சேவகர்)
 29. அந்தோனி செபமாலை (வயது 48 – லிகிதர்)
 30. அந்தோனி குருதாசன் (வயது 23 – விவசாயம்)
 31. அந்தோனி யோகநாதன் (வயது 18 – மாணவன்)
 32. அந்தோனி யோகநாதன் மிறால் (வயது 18- விவசாயம்)
 33. அக்கினிமுத்து இராமசாமி (வயது 34 – தொழிலாளி)
 34. அப்புத்துறை வீரசிங்கம் (வயது 40 – மெக்கானிக்)
 35. அப்பையா செல்லையா (வயது 57 – வியாபாரம்)
 36. அரியபுத்திரன் திருநாவுக்கரசு (வயது 49 – வியாபாரம்)
 37. அலெக்ஸ்சாண்டர் மாட்டின்ராஜ்குமார் (வயது 34 – மின் அத்தியட்சகர்)
 38. அழகன் காளிமுத்து (வயது 65 – தொழிலாளி)
 39. அழகையா காளிமுத்து (வயது 31 – விவசாயம்)
 40. அருள்மலர் ஜோன்ஸபப்பிஸ்ட் (வயது 28 – வீட்டுப்பணி)
 41. அருளானந்தம் துரைராஜா (வயது 32 – அரச ஊழியர்)
 42. அல்பிறட்போல் நோயல்இம்மானுவேல் (வயது 45 – விவசாயம்)
 43. அல்போன்ஸ் சூசைநாதன் குரூ (வயது 34 – மானேஜர்)
 44. ஆண்டி ஆறுமுகம் சுந்தரராஜ் (வயது 45 – விவசாயம்)
 45. நேசராசன் (வயது 50 – விவசாயம்)
 46. கென்றிமரியதாஸ் மியேஸ் (வயது 57 – விவசாயம்)
 47. பொன்னம்பலம் (வயது 40 – வியாபாரி)
 48. பொன்னையா அழகையா (வயது 65 – விவசாயம்)
 49. பேதுரு அரியரட்ணம் (வயது 42 – தபால் சேவகர்)
 50. பெஞ்ஜமின் ஸ் ரீபன்ஜெறே தவரெட்ணம் (வயது 45 – சிறைச்சாலை அதிகாரி)
 51. செபமாலை மேரிகார்மிலாராணி (வயது 28)
 52. செல்லையா சண்முகநாதன் (வயது 45 – மருந்தாளர்)
 53. வேலு இராஜலிங்கம் (வயது 25 – தொழிலாளி)
 54. வேலு கணேஸ் (வயது 40 – தொழிலாளி)
 55. வேலு கணபதிப்பிள்ளை (வயது 58 – விவசாயம்)
 56. வேலு பன்னீர்செல்வம் (வயது 31 – வியாபாரம்)
 57. வேலுப்பிள்ளை கணவதிப்பிள்ளை (வயது 58 – விவசாயம்)
 58. லோறன்ஸபிள்ளை பாபிலுப்பிள்ளை (வயது 47 – விவசாயம்)
 59. சன்னாசி ரெங்கையா (வயது 55 – தொழிலாளி)
 60. சந்தாம்பிள்ளை மரியாம்பிள்ளை (வயது 30 – கமம்)
 61. சந்தியா அல்யோன்ஸ் சூசைநாதன் (வயது 36 – வியாபாரம்)
 62. சுந்தரம்பிள்ளை செபஸ்தியான்பிள்ளை (வயது 45 – விவசாயம்)
 63. சுப்பன் கிருஸ்ணபிள்ளை (வயது 38 – வர்த்தகர்)
 64. சுப்பையா (வயது 75 – பிச்சைக்காரன்)
 65. சாமிநாதன் கண்ணுசாமி (வயது 28 – காவலாளி)
 66. சாசீம் சமது (வயது 36 – வியாபாரம்)
 67. சின்னக்குட்டி கதிரவேல் ஆறுமுகம் (வயது 72)
 68. சின்னத்தம்பி சுப்பிரமணியம் (வயது 51 – விவசாயம்)
 69. சீமான்பிள்ளை சந்தியாம்பிள்ளை (வயது 58 – விவசாயம்)
 70. சவிரியான் சந்தியோகுபறுனா (வயது 32 – விவசாயம்)
 71. வல்லிபுரம் தியாகராசா (வயது 40 – உதவி தபால் அதிபர்)
 72. றிச்சாட்குலாஸ் சேக்கிழாயார்

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.