மதவாச்சி – ரம்பாவ படுகொலை – 1984 செப்ரெம்பர்


அனுராதபுர மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக மதவாச்சி அமைந்துள்ளது. வவுனியா நகரிலிருந்து கிட்டத்தட்ட முப்பது கி.மீ தூரத்தில் தெற்கு பக்கமாக யாழ் கண்டி வீதியில் மதவாச்சி நகரம் அமைந்துள்ளது. மதவாச்சியில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களுமே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும் மக்கள் மதவாச்சி ஊடாகப் பயணம் செய்வது வழக்கம். 1983ஆம் ஆண்டு இனக்கொலை நிகழ்வின் பின்னர் இவ்வழி செல்லும் தமிழ் மக்களையும் அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் அங்குள்ள சிங்களவர் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வந்தது.

1984ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் பேருந்தினை மதவாச்சிச் சந்தியில் காவலிலிருந்த இராணுவத்தினர் வழிமறித்து, மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதிக்கு பயணிகள் பேருந்தினைக்  கொண்டுசென்று, பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டார்கள். இராணுவத்தினரின் இத்தாக்குதலில் பேருந்து ஓட்டுநர் உட்படப் பதினைந்து பேர் உயிரிழந்தார்கள். முப்பத்தொரு பயணிகள் காயமடைந்தார்கள்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.