சுன்னாகம் சந்தைப் படுகொலை – 28.03.1984


யாழ் மாவட்டத்தின் வலிகாமம் தெற்குப் பகுதியில் யாழ் நகரிலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் கே.கே.எஸ். வீதியில் சுன்னாகச் சந்திக்கு அருகில் சுன்னாகச் சந்தை அமைந்துள்ளது. யாழ் குடாநாட்டின் மிகப் பெருமளவான விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக இச்சந்தை அமைந்துள்ளது.  யாழ்ப்பாணம், கிளிநொச்சி  உட்பட பல மாவட்டங்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இச்சந்தையில் விற்கப்பட்டன.

28.03.1984 அன்று மதியம் சுன்னாகம் பஸ் நிலையப் பகுதியிலும், சந்தைப் பகுதிகளிலும் தமது அன்றாட வேலைகளில் பெருமளவான மக்கள் கூடியிருந்தனர். திடீரென பஸ் நிலையப் பகுதிக்கு ட்ரக் வண்டியிலும், ஜீப்பிலும் வந்திறங்கிய விமானப் படையினர் பெரும் பரபரப்புடன் காணப்பட்டதுடன், யாரும் எதிர்பாராத வகையில் திடீரெனச் சுன்னாகப் பஸ் நிலையப் பகுதிகளிலும், சந்தையிலும் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

விமானப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி அன்றைய தினம் தமது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்ட எட்டுப் பொதுமக்கள் உயிரிழந்ததுடன்,  ஐம்பது பொதுமக்கள் வரை படுகாயமடைந்தனர். சந்தை தீயூட்டப்பட்டதில் பல கடைகள் எரிந்து அழிந்தன. இதன் பின்னர் அவ்விடத்தை விட்டு விலகி மல்லாகப் பகுதியூடாக  கே.கே.எஸ் வீதி வழியாக காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இராணுவத்தினர் மல்லாகம் பகுதியில் தங்களது கண்களுக்குத் தென்பட்ட எல்லாப் பொது மக்களையும் தாக்கினார்கள். இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பளைப் பகுதிக்குச் சென்ற விமானப் படையினர் யூனியன் கல்லூரியில் பரீட்சை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள், மற்றும் அங்கு நடமாடிய பொதுமக்கள் மீதும் தாக்குதலை நடத்தினார்கள், இதில் இருபத்தாறு மாணவர்கள் காயமடைந்ததுடன், அவ்வீதி வழியாகப் பயணம் செய்த இருபது பொதுமக்களும் காயமடைந்தார்கள். பின்னர் விமானப் படையினர் பலாலி முகாமிற்கு திரும்பிச் சென்றார்கள்.

28.03.1984 சுன்னாகச் சந்தைப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. கந்தையா பாலசுப்பிரமணியம் (வயது 52 – பாதுகாவலர்)
  2. நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் ( வயது 54 – சந்தை மேற்பார்வையாளர்)
  3. தம்பிமுத்து சுந்தரலிங்கம் (வயது 38 – தொழிலாளி)
  4. வல்லிபுரம் சின்னத்துரை (வயது 68 – வியாபாரம்)
  5. வைரவி தியாகராசா (வயது 42 – நெசவு)
  6. பசுபதி தவமணி (வயது 43 – வீட்டுப்பணி)
  7. நடராசா யோகராசா (வயது 27 – வியாபாரம்)

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.