குட்டிச்சிறி மோட்டார் படையணி


  படியுங்கள்

 

வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் குண்டு வீச்சு விமானம் ‘இரையைக் கண்ட கரிக்குருவி’ மாதிரி குத்தெனச் சரிந்து பாய்கையில், விமான எதிர்ப்புத் துப்பாக்கியை சட்டென உயர்த்தி விமானத்தின் போக்குக்கு ஏற்ப ரவைகளைத் தீர்ப்பதற்கு, ஒரு தனித்திறமை வேண்டும். குட்டிச்சிறிக்கு இது நிறையவே பிடிக்கும். பெரும்பாலான சண்டைகளில் ஐம்பது கலிபர் துப்பாக்கிக்கு அருகில்தான் அவன் நின்றிருக்கிறான்.

சின்னவயதிற்கே உரிய போட்டா போட்டியுடன் வானூர்திகளுடன் இவன் சண்டையிடுவான். பதிந்து சரியான இலக்கைத் தாக்குவதற்கு வானூர்த்திகளை இவன் விடுவதேயில்லை. சண்டையின் முடிவில் வானூர்த்திகளின் இலக்கு, விமான எதிர்ப்புத்துப்பாக்கியுடன் அலையும் இவர்களது பிக்கப் வண்டிகளாகத் தான் இருக்கும்

குட்டிச்சிறி ஆபத்துக்களுக்கு ஒருபோதும் அஞ்சுவதில்லை. விமானங்களுடனான அவனது சண்டைகளும் ஓய்வதில்லை.

அந்த உற்சாகம் நிறைந்த இளைஞனின் போராட்ட வாழ்க்கையே வேறானதுதான், உலகம் வியக்கத்தக்கது.

அவன் இயக்கத்திற்கு வரும்பொழுது சின்னவனாக இருந்தான். மெல்லியவனாக இருந்தான். ஏற்கனவே அங்கு சிறி என்றொரு தோழன் இருந்தபடியால், அவனது தோற்றத்திற்கு ஏற்றமாதிரி குட்டிசிறி என்ற பெயர் நிலைத்துவிட்டது.

புலிகள் முகாம் ஒன்றில் தற்காலிக பயிற்சியுடன், குட்டிச்சிறியின் போராட்ட வாழ்க்கை ஆரம்பமானது. முதலில் தொட்டா கட்டும் வேலைதான் அவனுக்குத் தரப்பட்டது. பாவிக்கப்பட்ட ரவைகளின் வெற்றுககளை எடுத்து, மருந்து நிரப்பி புதிதாக உருவாக்கும் வேலை.

வெடிமருந்துடன் பரிட்சயமான அந்த முதலாவது நாளின் பின்பு அவனது சிந்தனை முழுவதும் வெடிமருந்தியக்கம் தொடர்பானதாகவே இருந்தது.

புலிகளின் முதலாவது கண்டுபிடிப்பான ஆறு அங்குல மோட்டார் தயாரிக்கப்பட்டபோது, அதில் அவனது பங்களிப்பு பெருமளவில் இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள கல்லுண்டாய் வெளியில் அந்த எறிகணை செலுத்தி முதலாவது ஏற்கனையை வெற்றிகரமாக ஏவியபொழுது, குட்டிசிறி மகிழ்ட்சியில் தத்தளித்தான்.

புலிகளின் வரலாற்றில் இன்று நவீன தொழில்நுட்பங்களோடு பரிட்சயப்பட்டு பல்வேறு வகையான எறிகணை செலுத்திகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அதன் ஆரம்பப் புள்ளி, மிக மெதுவாக ஆடிஅசைந்து செல்லும் இந்த ஆறு அங்குல மோட்டாரில் இருந்துதான் வெளிப்பட்டது.

அந்த மோட்டாருக்கு ‘குட்டிச்சிறி’ என்ற பெயரே இடப்பட்டது.

கோட்டை இராணுவ முகாமை நோக்கி அந்த மோட்டார், எறிகணைகளைச் செலுத்தத் தொடங்கியபோது, குட்டிச்சிறி அருகில் நின்றான்.

முதலாவது எறிகணை முற்றவெளிக்குள் பயனற்று விழுந்து வெடித்தது.

இரண்டாவது எறிகணை சற்று முன்னேறி, கோட்டை அகழிக்குள் விழுந்தது.

மூன்றாவது எறிகணை புலிகளின் ஆர்வமான பார்வைகளை ரசித்துக் கொண்டே, கோட்டை மதில் சுவரை தாண்டி உள்ளே விழுந்து அதிர்ந்தது.

மதிலின் மறைவிற்கு உள்ளே இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டு பலர் காயப்பட்டு இருந்தனர்.

அந்த எறிகனைதான், கோட்டையில் இருந்த ஆக்கிரமிப்பாளரின் நிம்மதியான உறக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

குட்டிச்சிறி விடிமருந்து இயக்கம் தொடர்பாக நிறைந்த அறிவு பெற்றிருந்தான். அவன் பெரும்பாலானவற்றை அனுபவங்களில் இருந்துதான் கற்றுக் கொண்டான்.

இன்று உலகமே வியக்கும் தொழில்நுட்ப அறிவு எம்மிடம் இருக்கிறது என்றால் அதற்குள், பத்தாம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்தி விட்டு இயக்கத்திற்குள் வந்த இவனின் பங்களிப்பு, வியக்கத்தக்களவில் நிறைந்து கிடக்கிறது.

சண்டைகளில் எவ்வளவு அதிகமாக தீவிரமாக இருந்தானோ அதேயளவு இளகிய மனமும் இவனிடமிருந்தது. தோழர்கள் ஆபத்துக்களில் சிக்கும் பொழுதெல்லாம் அழுவான். அதுவும் அவனது இயல்பு.

வெற்றிகளைக் காணும் பொழுதெல்லாம் கட்டுப்படுத்த முயலாமல் மகிழ்ச்சியில் சிரிப்பான். கன்னங்கள் உயர்ந்து, கண்களும் சேர்ந்து சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு அது.

ஆறு சகோதரங்களிற்குப் பின்பு இறுதியாக பிறந்தவன் குட்டிச்சிறி. குடும்பத்தின் கடைசிப் பிள்ளைக்கே உரித்தான பிடிவாதமும், அதிகாரமும் இந்தச் செல்லப்பிள்ளைக்கு இயக்கத்திற்குள்ளும் இருந்தது.

ஒருநாள், உலங்கு வானூர்தி ஒன்று யாழ் நகரை அண்டிய பகுதிகளில் வட்டமிட்டுப் பதிவதும், ரவைகளைத் தீர்ப்பதுமாக இருந்தது.

எறிகணைத் தொழிற்சாலைக்குத் தேவையான கழிவு இரும்புகளை ஏற்றி வந்த குட்டிசிறியின் “வான்” அந்த வானூர்தியின் இலக்கானது. சாரதியாக குட்டிசிறியே இருந்தான். அவனொரு சிறந்த சாரதி, எந்த நிலைகளிலும் பதட்டமில்லாமல் வாகனத்தைச் செலுத்தக் கூடியவன். இயக்கத்திற்குள் வருவதற்குச் சில வருடங்களுக்கு முன்னமே, அவனுக்கு வாகனங்களைச் செலுத்திய அனுபவம் இருந்தது.

அவனுக்காக அந்த உலங்குவானூர்தி பலமுறை பதிந்து தோற்றது.

தோழர்களின் கேலியான வரவேற்பிற்கு நடுவே அவன் முகாமுக்குள் நுழைந்தான். கிட்டண்ணையும் அங்கு நின்றார். அவனுக்கு கண்கள் கலங்கியிருந்தன. “எனக்கு அடித்துப் போட்டாங்கள்” என்று விம்மினான். அவனை அடித்துத் துரத்த வேண்டும் எனப் பிடிவாதமாக நின்றான். அந்தப் பிஞ்சின் மனதை கிட்டண்ணை புரிந்து கொண்டார். ‘ஐம்பது கலிபர்’ துப்பாக்கி பொருத்தப்பட்ட பிக்கப் வண்டியொன்று வெளியே சென்றது.

‘ஐம்பது கலிபர்’ துப்பாக்கியை குட்டிசிறி இயக்கினான். சிறு நேரம் அவனுக்கும் உலங்கு வாநூர்த்திக்கும் சண்டை முட்டிவாக கீழே இருந்து வரும் கடுமையான எதிர்ப்பை உணர்ந்து வானூர்த்தி சற்று உயர்ந்தது; பின்பு மறைந்தது. இது அவனது ஒரு சம்பவம். இப்படி அவனின் கதை சொல்ல பல சம்பவங்கள் நிறைந்து போயுள்ளன.

கிட்டண்ணை குட்டிசிறியில் மிகவும் அன்பு வைத்திருந்தார். அந்நேரங்களில் மற்றைய எல்லோரையும் விட குட்டிசிறி சின்னவனாக இருந்தார். அதன் காரணமாகவும் எல்லாத் தோழர்களும் அவனில் பாசத்தைப் பொழிந்தார்கள். குட்டிசிறி கிட்டண்ணையில் உயிரையே வைத்திருந்தான். அக்காலங்களில், இராணுவ முகாம்களில் இருந்து புறப்படும் படையினருடன் ஒவ்வொரு நாளும் சண்டையிட வேண்டியிருந்த்தது. அப்போதெல்லாம் கிட்டண்ணைக்கு அருகில் நிழல்போல இவன் நிற்பான்.

தேசவிரோதிகளின் குண்டுவீச்சால், கிட்டண்ணை கால்களில் ஒன்றை இழந்தபோது, குட்டிசிறி வேதனையில் தவித்துத் துடித்தான்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டதன் பிற்பாடு, மேலதிக சிகிச்சைக்காக கிட்டண்ணை இந்திய விமானபடை விமானம் ஒன்றில் இந்தியாவிற்குச் சென்றபோது, குட்டிசிறியும் அவருடன் சென்றான். இந்தியப் புலிகள் போர் ஆரம்பித்தபிற்பாடு, நீண்ட நாட்களாக கிட்டண்ணையுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்திய இந்திய அரசு, அவரையும் தோழர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. குட்டிசிறியும் கிட்டண்ணையுடன் கைது செய்யப்பட்டான்.

இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் இந்திய மண்ணில் இறங்கிய இவர்கள் மீது, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்ற குற்றத்தை, இந்திய நீதித்துறை சுமத்தியது.

‘தம்மை விசாரணை செயும்படியும் அல்லது தமிழீழத்திற்கு தம்மை அனுப்பும்படியும் கோரி’ சிறையில், கிட்டண்ணை சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதன் விளைவாக, புலிப்படை வீரர்கள் கை கால்கள் இறுகப் பிணைக்கப்பட்ட நிலையில் இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு தமிழீழத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள். கிட்டண்ணை விடுதலை செய்யப்பட்டார். ஆனால், குட்டிசிறியும் மற்றைய தோழர்களும், தமிழீழத்திலிருந்த இந்தியப்படைமுகாம்களுக்கு நடுவில், தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டார்கள்.

இந்தப் பிடிவாதம் நிறைந்த செல்லப்பிள்ளை, வளர்ந்ததும் பண்பட்டதும் இந்தியச் சிறைகளில்தான்.

இந்தியர்கள் தமிழீழத்திலிருந்து வெளியேறிச் செல்லும்போது குட்டிசிறியும் விடுதலை செய்யப்பட்டான். இப்பொழுது அவன் வளர்ந்திருந்தான். இயல்புகளில் கூட நிறைய மாற்றம். அமைதியாக இருந்தான். ஆனால், கன்னங்கள் உயர்ந்து கண்களும் சேர்ந்து சிரிக்கும் அவனது சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.

அதன் பின்பு, குட்டிசிறி தலைவரின் பாதுகாப்பு அணியில் ஒருவனாக இருந்தான். அவரின் அன்புக்குரிய குழந்தைகளில் அவனும் ஒருவன்.

 

அங்கு நின்று பல்வேறு வேலைகளில் ஈடுபட்டான். பெரும்பாலான வேலைகள் அவனது விருப்பத்திற்குரிய வெடிமருந்துத் தொழில்நுட்பமாகவே இருந்தது. ஆனால், சண்டைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற இவனது துடிப்பை பொதுவாக தடுத்து நிறுத்த முடிவதில்லை.

அவனது ஆர்வம், உற்சாகம், செயற்படும் பொழுது இருக்கும் உறுதி, வேகம் எல்லாமே வியக்கத்தக்கது. அவன் ஒரு பொழுதும் சோர்ந்து போவதில்லை.

குட்டிசிறியினது போராட்ட வாழ்வின் ஆரம்பம் எப்படி இருந்ததோ அதைப் போலவே, அவனது முடிவும் கிட்டண்ணைக்கு அருகிலே இருந்தது.

 

அது சோகமானது; நினைக்கவே இதயம் தாங்காது. அது எப்படி இருந்திருக்கும்!

சண்டைக்களங்களில் எலாம் எம் – 16 துப்பாக்கியுடன் கிட்டண்ணைக்கு அருகில் இருந்து, அவரின் கட்டளைகளை நிறைவேற்றியவன், இப்போதும் அப்படித்தான் நிமிர்ந்து உற்சாகமாக செய்திருப்பான்.

சாவின் விளிம்பில் நிற்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். முன்பும் அப்படித்தான்; சாவுக்கு முன்னால் நின்றுகொண்டுதான் அவன் கிட்டண்ணையின் கட்டளைகளை நிறைவேற்றினான். இப்போதும் ஒன்றும் வித்தியாசமாக இல்லை.

பதினாறு வயதில் சின்னவனாக இயக்கத்திற்கு வந்து கிட்டண்ணைக்கு முன்பு நின்றவன், நீண்ட ஒன்பது வருடப் போராட்ட வாழ்க்கையின் பின்பு, உயர்ந்த இளைஞனாக கிட்டண்ணைக்கு முன்பு நிமிர்ந்து நின்றிருப்பான்.

கட்டளைகளை மட்டும் மிகச்சரியாக, தவறேதும் இல்லாமல் செய்திருப்பான். சாவுக்கு முன்பாக கிட்டண்ணைக்கு அருகில் வந்திருப்பான், அவரைப் பார்த்துச் சிரித்திருப்பான்.

கன்னங்கள் உயர்ந்து, கண்களும் சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு…….

அதுதான்……… அந்தச் சிரிப்புத்தான் இறுதியாக இருந்திருக்கும்.

களத்தில்இதழிலிருந்து

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”